கொரோனா அறிகுறியுடன் இருந்த முதியவரை பிணவறை அருகே தூக்கி வீசிய பொதுமக்கள்
- IndiaGlitz, [Saturday,April 25 2020]
சளி இருமலுடன் இருந்த சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவரை மதுரையில் உள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பிணவரை அருகே தூக்கி வீசி சென்ற கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் காலில் புண் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறி மதுரை வரை சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு கட்டத்தில் சுயநினைவின்றி பிளாட்பாரத்தில் மயங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு சளி இருமல் ஆகியவை இருந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை தூக்கி அருகில் உள்ள அரசு மருத்துவமனை அருகே உள்ள பிணவரை அருகே தூக்கிவீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.
இது குறித்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை ரெட்கிராஸ் நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு அதன் பின்னர் காய்ச்சல் சளிக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்த போது அவர் சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் டெய்லர் முகமது என்றும் அவரது வயது 60 என்றும் தெரிய வந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு பக்கம் மனிதநேயம் இன்றி பொதுமக்கள் அவரை தூக்கி வீசிச் சென்ற நிலையில் இன்னொரு பக்கம் மனித நேயத்துடன் ரெட்கிராஸ் நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.