உடம்பை பாதுக்கோங்கன்னு சொன்னேன், அடுத்த நாளே அவரை பார்க்க முடியலை: நெல்லை சிவா குறித்து மதுரை முத்து!

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நேற்று மாரடைப்பால் காலமான நிலையில் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவரான மதுரைமுத்து அவரது மறைவு குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் ’கடைசியாக நாங்கள் இருவரும் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பின்போது சந்தித்துக் கொண்டபோது ’உடம்ப பாத்துக்கோங்க’ என்று சொன்னேன். ஆனால் அடுத்த ஷெட்யூலில் அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்துடன் கூறினார்.

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’சில்லுனு ஒரு காதல்’ என்ற சீரியலில் நெல்லை சிவா மற்றும் மதுரை முத்து ஆகிய இருவரும் நடித்து வந்தனர். இருவரும் இணைந்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் அப்போது இருவரும் சேர்ந்து ஒரு திருமணத்தை நடத்தி வைத்தது போன்ற காட்சி எடுக்கப்பட்டதாகவும் மதுரை முத்து கூறினார்.

அப்போது ’ஏன் நீங்கள் திருமணம் செய்யவில்லை’ என்று நெல்லை சிவாவிடம் தான் கேட்டதாகவும், ’அதை பற்றி பேசினோம் என்றால் மணிக்கணக்கில் போகும், ஒரு மெகா சீரியலை எடுக்கலாம், அதனால் இன்னொரு நாளைக்கு ஆற அமர உட்கார்ந்து பேசுவோம், என்று நெல்லை சிவா பதில் கூறியதாகவும் மதுரை முத்து நினைவு கூர்ந்தார்.

அதேபோல் கடைசியாக நான் அவரை பார்த்த அன்று ’சாப்பாடு சரியில்லை ஏதோ ஃபுட் பாய்சன் ஆகிடுச்சு’ என்று சொன்னார். அப்போது ’உடம்ப பாத்துக்கோங்க’ என்று சொன்னேன். ஆனால் அடுத்த ஷெட்யூலில் அவரை பார்க்க முடியாத நிலை ஆகிவிட்டது என்று கண்கலங்கினார். மேலும் விவேக், பாண்டு, நெல்லை சிவா என வரிசையாக காமெடி நடிகர்கள் நம்மை விட்டு போய்க் கொண்டிருப்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது’ என்றும் மதுரை முத்து கண்கலங்கி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.