ராஜராஜ சோழன் குறித்து பா ரஞ்சித் பேசிய வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
- IndiaGlitz, [Tuesday,August 03 2021]
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்து 2019ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பா ரஞ்சித் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் ராஜராஜன் சோழன் குறித்து கூறிய போது ’ராஜராஜ சோழன் காலம் பொற்காலம் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் ராஜராஜ சோழன் காலம் கற்காலம். அவருடைய காலத்தில்தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டது. எனவே ராஜராஜ சோழனின் காலம் தான் தமிழகத்தின் இருண்ட காலம் என்று பேசினார்.
பா ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் ஒரு சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகாரின் அடிப்படையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சர்ச்சைக்குரிய வகையில் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க மதுரை உயர்நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் பெற்றதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘பா ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என்றும் அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.