மூதாட்டியை தனது காரில் அழைத்துச் சென்று கைச்செலவுக்கு காசும் கொடுத்த மாவட்ட ஆட்சியர்!!!
- IndiaGlitz, [Tuesday,December 15 2020]
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் அன்பழகன் தன்னிடம் மனு கொடுக்க வந்த மூதாட்டியை தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்று கைச்செலவுக்கு காசும் கொடுத்து இருக்கிறார். இச்சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோரிப்பாளையம் அடுத்த வயக்காட்டு தெருவைச் சேர்ந்த பாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை குன்றிய நிலையில் கையில் மனுவுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பே காத்து இருந்தார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த ஆட்சியர் அன்பழகன் மூதாட்டியைப் பார்த்தவுடன் அந்த இடத்திலேயே காரை நிறுத்தச் சொல்லி இறங்கி நேரே சுல்தான் அருகில் சென்றார். பின்பு சுல்தான் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்ட அவர் உடல் நிலைக்குறித்து விசாரித்தார்.
உடனே உடல்நிலை குன்றிய அவரை அன்பழகன் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு சுல்தானின் வீட்டிற்கே அழைத்தும் சென்றார். அங்கு சென்றவுடன் மூதாட்டியின் கையில் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அடுத்து சுல்தான் கூறிய குறைகளை கேட்டறிந்த அவர் அதை உடனடியாக விசாரிக்குமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சுல்தானுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர் கைச்செலவுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தையும் கொடுத்து இருக்கிறார். இதைச் சற்றும் எதிர்ப்பாராத சுல்தான் மனம் நெகிழ்ந்து போனதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 80 வயதான சுல்தான் தான் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் தன்னை வீட்டை விட்டு காலிசெய்யுமாறு கூறியதாகக் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் முன்பணத்தை திரும்ப கொடுக்காமல் தன்னை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார். இதை விசாரிக்குமாறு மனு அளிக்க வந்தவரை கலெக்டர் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டு வந்து விட்டதோடு கைச்செலவுக்கு பணத்தையும் கொடுத்து உதவி இருக்கிறார்.
முன்னதாக அன்பழகன் கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது தன்னுடைய கார் டிரைவரை காரில் அமர வைத்து தான் காரை ஓட்டிச்சென்று டிரைவரின் வீட்டில் இறக்கிவிட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. தற்போது உடல்நலம் குன்றிய மூதாட்டியை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று அவருக்கு பணத்தையும் கொடுத்து உதவிய மாவட்ட ஆட்சியர் மக்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.