செங்கல்பட்டு பிரச்சனை: மதுரை விநியோகிஸ்தர் சங்கத்தின் அதிரடி முடிவு
- IndiaGlitz, [Thursday,April 21 2016]
கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் கூடி, செங்கல்பட்டு ஏரியாவில் 'தெறி' படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு இனிமேல் எந்த திரைப்படமும் வழங்கப்படுவதில்லை என அதிரடியாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்பட தமிழகத்தின் அனைத்து நகர திரையரங்க உரிமையாளர் சங்கங்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று மதுரை நகர விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் வெளியான அறிக்கை ஒன்றின் முழுவிபரம் பின்வருமாறு:
திரை உலகை காத்திட, திரையரங்கம் செழித்திட நாம் அனைவரும் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஒரு கூட்டு குடும்பமாக இருக்கவேண்டும். ஆகவே இப்போது நடைபெறும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனையில் மதுரை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் நடுநிலை வகிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
யாருக்கும் யாரும் தடைபோடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. வியாபார சுதந்திரம் தொழிலுக்கு மிக அவசியம். யாருக்கும் யாரும் தடையாக இருக்க கூடாது. எனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனையில் நாங்கள் (மதுரை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்) நடுநிலை வகிப்போம்.