வானத்தில் படு விமர்சையாக நடந்த திருமணம்? பிறகு நடந்தது என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Monday,May 24 2021]
கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் இன்றுமுதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் தங்களது திருமணத்தை விமானத்தில் அதுவும் விருந்தினர்கள் புடைசூழ நடத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கோரிப்பாளையத்தை சேர்ந்த மருத்துவர் ராகேஷ். இவர் தனது உறவுக்கார பெண்ணான தட்சிணாவை கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தனது பேரனின் திருமணத்தை படு விமர்சையாக செய்ய ஆசைப்பட்டு இருக்கிறார் அவரின் தாத்தா. இதற்காக மதுரையில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தை ஒரு ஏஜெண்ட் மூலம் 2 மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.
மேலும் கொரோனா விதிமுறைகளுக்காக குடும்பத்தைச் சேர்ந்த 130 பேர் கொரோனா பரிசோதனையையும் செய்து கொண்டுள்ளனர். இந்த பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து இருக்கிறது. இந்நிலையில் விமானம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைக் கடந்து செல்லும்போது ராகேஷ், தட்சிணா இந்தத் தம்பதிகள் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இப்படி பறக்கும் விமானத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் விமான ஊழியர்கள் தவிர 161 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடந்த திருமணத்தால் ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் இந்தத் திருமணம் குறித்து விசாரணை நடத்தவும் மத்தியப் போக்குவரத்து விமானத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் விமர்சிகையாக நடத்தப்பட்ட இந்தத் திருமணம் குறித்தும் அது விதிமுறை மீறலாக குற்றம் சாட்டப்படுவது குறித்தும் “எல்லாத்துக்கும் காரணம் இந்த பெருசுதான் காரணம்” என சமூக வலைத்தளத்தில் சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.