ரூ.7 கோடி நன்கொடை கொடுத்த அதே பள்ளிக்கு மீண்டும் ரூ.3 கோடி.. ஆயி பூரணம்மாளுக்கு குவியும் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Wednesday,February 07 2024]

மதுரையைச் சேர்ந்த ஆயி பூரணம்மாள் என்பவர் சமீபத்தில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆயி என்ற பூரணம்மாள் கனரா வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார். மகள் இறக்கும் போது தங்களுக்கு சொந்தமான நிலத்தை பள்ளிகளுக்கு தானமாக வழங்குமாறு கூறிய நிலையில் மகளின் கடைசி வார்த்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கொடிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது பெயரில் இருந்த ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கினார்.

இதையடுத்து அவருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்ததோடு சமீபத்தில் குடியரசு தின விழாவில் அவருக்கு விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த அதே பள்ளிக்கு தற்போது மீண்டும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். இது குறித்த ஆவணங்களை அவர் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா என்பவரிடம் ஒப்படைத்த நிலையில் அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.