வீடு வீடாக கஞ்சா சப்ளை செய்த கும்பல்… போலீஸ் வேட்டையில் பிடிபட்ட சம்பவம்!!!
- IndiaGlitz, [Thursday,November 19 2020]
மதுரை அவனியா புரத்தில் வீடு வீடாக சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பல் பிடிபட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஊரடங்கு நேரத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டு இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட சில கும்பல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டனர். தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும் மதுரை பகுதியில் கஞ்சா விற்பனை சூடுபிடித்து இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம் வேலை இழந்து இருக்கும் சிலர் இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவம் மதுரையில் அதிகரித்து இருக்கிறது என போலீஸ் தரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.
மதுரை அடுத்த வில்காபுரம் பகுதியில் வசிக்கும் வண்டு சரவணன். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கும் நிலையில் முனியசாமி என்பவரோடு சேர்ந்து கொண்டு அவனியாபுரத்தின் செம்பூரணி பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வீடு வீடாக சென்று கஞ்சா சப்ளை செய்து இருக்கிறார். ரகசியத் தகவலின் மூலம் இதை அறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து இருக்கின்றனர். மேலும் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.