அடுத்த மடாதிபதி நான்தான்… மதுரை ஆதீனப் பதவிக்கு அடிபோடும் நித்யானந்தா?
- IndiaGlitz, [Friday,August 13 2021]
மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதியாக இருப்பவர் அருணகிரிநாதர். இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவின்றி கவலைக்கிடமான நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி நான்தான் எனக் கூறிக்கொண்டு கைலாசாவில் இருந்து நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி வருகிறது.
இதனால் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை தற்போது பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை ஆதீனத்தின் சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் உள்ள அறை தற்போது பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாலியல் வழக்கில் சிக்கி சர்ச்சை ஏற்படுத்திய நித்யானந்தா சுவாமிகள் தற்போது கைலாசா எனும் புது நாட்டை ஏற்படுத்திக் கொண்டு சோஷியல் மீடியா வழியாகப் பக்தர்களுடன் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் 293ஆவது மாடதிபதி நான்தான் என அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இதுகுறித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், Executive order of Shrikailasa (ஸ்ரீகைலாசா இந்துதேச அரசாங்க அறிக்கை) என்ற தலைப்பில் ஜெகத்குரு மஹாசன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்தா பரமசிவம் அரசாங்க அறிக்கை (10112 ஆகஸ்ட் 09, 2021) என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் 292 ஆவது மடாதிபதி அருணகிரிநாதரின் உடல்நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
அதையடுத்து மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி நான்தான் என்று கூறிக்கொண்ட நித்யானந்தா, மதுரை ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் அதிகாரங்களை தான் பெற்றுள்ளதாகவும் ஆன்மீக மற்றும் மத ரீதியான சடங்குகள் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் தமக்கு உள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக சுவாமி நித்யானந்தா அவர்களை தற்போதைய மடாதிபதி அருணகிரிநாதர் நியமித்தார். ஆனால் இந்த நிகழ்வுக்கு பின்னர் நித்யானந்தா வழக்குகள் மற்றும் பாலியல் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இளைய மடாதிபதி எனும் பதவியை ரத்துசெய்யுமாறு அருணகிரிநாதர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. மேலும் மதுரை ஆதினத்திற்குள் நித்யானந்தா நுழைவதற்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியிருக்கும்போது மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி நான்தான் என சுவாமி நித்யானந்தா அறிக்கை வெளியிட்டு இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சிலர் நித்யானந்தாவின் செய்கையை கேலி, கிண்டலாகவும் பார்க்கத் துவங்கிவிட்டனர்.