ரூ.1.25 கோடி சம்பளத்தில் வேலை. சென்னை ஐஐடி மாணவர் புதிய சாதனை
- IndiaGlitz, [Saturday,December 03 2016]
சென்னை ஐஐடியில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் மாணவர் ஒருவருக்கு 1.25 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் ஐ.ஐ.டி ரூர்க் மற்றும் ஐ.ஐ.டி கவுகாத்தி ஆகிய கல்லூரிகளில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் ஒரு கோடி சம்பளத்திற்கு மாணவர்களை தேர்ந்தெடுத்ததுதான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது சென்னை ஐ.ஐ.டி முறியடித்துள்ளது.
சென்னை ஐஐடியில் ஒவ்வொரு வருடமும் கேம்பஸ் இண்டர்வியூ நடைபெறுவது வழக்கம். உலகின் முன்னணி நிறுவனங்கள் மாணவர்களை இந்த இண்டர்வியூ மூலம் தேர்வு செய்வதுண்டு.
இந்நிலையில் இந்த ஆண்டு மாணவர்களுக்காக நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் ஐ.ஐ.டி சென்னை மாணவர் ஒருவரை, உபேர் நிறுவனம் 1.25 கோடி சம்பளத்திற்கு வேலைக்கு தேர்வு செய்துள்ளது.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 93 லட்ச ரூபாய் சம்பளத்திற்கு ஒரு மாணவரையும், ஆரக்கிள் நிறுவனம் 85 லட்ச ரூபாய் சம்பளத்திற்கும் ஒரு மாணவரையும் தேர்வு செய்துள்ளது.
இந்த கேம்பஸ் இண்டர்வியூவில் மொத்தம் 130 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக ஐஐடி சென்னை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் மாணவர்களின் பெயர்களை ஐஐடி நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.