சிம்பு முன்ஜாமீன் வழக்கு. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Monday,January 04 2016]
கடந்த சில நாட்களாக தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் அளித்து தீர்ப்பளித்துள்ளது.
அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல், பெண்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறி சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த மாதம் 12-ஆம் தேதி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜனவரி 2-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மனு தாக்கல் செய்திருந்தார்..
இந்த மனுமீது இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், 'சிம்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஜாமீனில் வரக்கூடிய பிரிவு என்பதால் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகத் தேவையில்லை என்றும் முன்ஜாமீன் தேவை எனில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையே அணுகலாம் என்றும் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராகுமாறும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.