நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு. முதல்வர், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

  • IndiaGlitz, [Monday,February 27 2017]

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 17ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த கூடாது என்றும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகரை வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இதற்கு உடன்படாததால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த வாரமே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மு.க.ஸ்டாலின் மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சபாநாயகர், முதலமைச்சர், தலைமை செயலாளர், சட்டப்பேரவை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை மார்ச் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.