சிறையில் தள்ளிவிடுவேன். ஜெ. மகன் என்று கூறி வழக்கு போட்ட நபருக்கு நீதிபதி எச்சரிக்கை
- IndiaGlitz, [Friday,March 17 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது ஆன்மாவை கூட நிம்மதியாக இருக்கவிடாமல் திடீர் திடீரென ஆளாளுக்கு தோன்றி நான் ஜெயலலிதாவின் மகன், நான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகின்றனர். மறைந்த முதல்வருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படும் போலியான நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் 'தான் ஜெயலலிதாவுக்கு சோபன்பாபுக்கும் பிறந்த மகன் என்றும், எம்ஜிஆரின் சம்மதத்துடன் தான் வசந்தாமணி என்பவருக்கு தத்து கொடுக்கப்பட்டதாகவும், தத்து பத்திரத்தில் எம்ஜிஆர் கையெழுத்து போட்டிருப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளர். இவருக்கு சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உதவியாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதி, 'இந்த மனுவை பார்த்தாலே பொய் வழக்கு என்று தெளிவாக தெரிகிறது. தத்துக் கொடுக்கும் பத்திரத்தில் எம்.ஜி.ஆர் 1986ஆம் 'ஆண்டு கையெழுத்திட்டதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, கையை கூட அசைக்க முடியாத நிலையில் இருந்தார். இந்த மனுவை ஒரு எல்.கே.ஜி. மாணவனிடம் கொடுத்தால் கூட, அவன் இது பொய்யான பத்திரம் என்று தெளிவாக கூறி விடுவான். இந்த ஐகோர்ட்டை உங்களது தனிப்பட்ட விளையாட்டுக்கு பயன்படுத்துகிறீர்களா' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் 'சாலையில் கிடைத்த ஏதோ ஒரு ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து, அதில் மனுதாரர் தன் படத்தை ஒட்டி போலி ஆவணங்களை தயாரித்துள்ளது நன்கு தெரிவதாகவும், நாளை ஒரிஜினல் ஆவணங்கள், புகைப்படம், தத்து பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சிறையில் தள்ளிவிடுவேன்' என்றும் நீதிபதி எச்சரித்தார்.
மேலும் பல நல்ல விஷயங்களுக்கு வழக்கு போடும் டிராபிக் ராமசாமி இதுபோன்ற வழக்குகளில் ஏன் சம்பந்தப்படுகிறீர்கள் என்றும் அவருக்கும் நீதிபதி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.