'விஸ்வரூபம் 2' வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Thursday,August 09 2018]
கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு எதிராக வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கமல்ஹாசனிடம் 'மர்மயோகி' படத்திற்காக ரூ.4 கோடி முன்பணம் கொடுத்ததாகவும், ஆனால் இந்த படத்தை கமல், 'உன்னை போல் ஒருவன்' படத்திற்கு பயன்படுத்தி கொண்டதாகவும், இந்த பணத்தை வட்டியுடன் கமல் கொடுக்க வேண்டும் என்றும், அதுவரை அவரது 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிந்து சற்றுமுன் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து திட்டமிட்டபடி 'விஸ்வரூபம் 2' திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது