'சூரரை போற்று' இந்தி ரீமேக்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,September 08 2021]
சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த ‘சூரரை போற்று’திரைப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமாக சீக்யா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இணைந்திருந்தது. இந்த நிலையில் 2டி நிறுவனம் என்டர்டைன்மென்ட், அபுன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா தான் இந்தியிலும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘சூரரை போற்று’ தமிழ் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்ற நிறுவனம் ‘சூரரை போற்று’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது 2டி நிறுவனம் தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி ‘சூரரை போற்று’படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சூர்யாவின் பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் ‘சூரரை போற்று’ஹிந்தி ரீமேக் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.