விஷாலின் 'சக்ரா' வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- IndiaGlitz, [Thursday,October 15 2020]
நடிகர் விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை வரும் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பதை பார்த்தோம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவீந்திரன் பதிவு செய்த வழக்கில் விஷால் நடித்த ’ஆக்சன்’ படத்தால் தனக்கு 8 கோடிக்கும் மேல் நஷ்டம் என்றும், அந்த பணத்தை திருப்பித்தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும், ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், அந்த பணத்தை விஷால் தனக்கு செலுத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் தான் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இன்னும் இரண்டு வாரங்களில் விஷால், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.4 கோடி தர வேண்டும் என உத்தரவிட்டதாகவும், ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஷால் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ‘சக்ரா’ திரைப்படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகிவிட்டதாகவும், இந்த படத்தை இடைவேளை வரை மட்டும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிட விஷால் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது ‘இரும்புத்திரை’ திரைப்படமும் இடைவேளை வரை மட்டுமே பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.