தளபதி விஜய்க்கு ஜோடியாகிறாரா விஜய்சேதுபதி பட நாயகி?

  • IndiaGlitz, [Wednesday,August 19 2020]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா வைரஸ் அபாயம் முடிவடைந்து திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட பின்னரே இந்த படம் ரிலீசாகும். அனேகமாக இந்த படம் வரும் தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்திற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது என்று செய்திகள் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.

துப்பாக்கி, கத்தி, மற்றும் சர்கார் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் நான்காவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருப்பதாகவும், தமன் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா உள்பட ஒரு சிலர் இந்த படத்தின் நாயகியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நடிகை மடோனா செபஸ்டியன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் விஜய்சேதுபதியின் ‘கவண்’, ‘ஜூங்கா’, ‘காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.