ஆய்வுக்காக சென்ற அமைச்சர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்… பரபரப்பு காட்சி வைரல்!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சிந்து ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அங்குள்ள 2 பாலங்கள் நேற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் பாட்டியா எனும் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்திற்கு மத்தியில் 9 பொதுமக்கள் மாட்டிக்கொண்டனர். கூரை மட்டும் மூழ்காத நிலையில் 9 பேரும் வெள்ளத்திற்கு நடுவே மொட்டை மாடியில் மாட்டிக்கொண்ட சம்பவத்தை அடுத்து அம்மாநில உள்துறை அமைச்சர் நாரோத்தம் மிஸ்ரா மீட்பு பணிகளை நேரிலேயே செய்யத் துவங்கினார்.

இதற்காக மாநில மீட்புக் குழுவுடன் படகில் பயணித்த அமைச்சர் நிவாரணப் பொருட்களுடன் அங்க சென்றார். அனால் அமைச்சர் மீட்பு நடவடிக்கையை துவங்கும் முன்பே அவர் சென்ற படகின் மீது மரம் சாய்ந்து விழுந்ததாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சரும் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நபர்களுடன் அமைச்சரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.

இதனால் வெள்ளை குர்தா மற்றும் கருப்பு கோட் அணிந்த அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா IAF பணியாளர்கள் கொடுத்த கயிற்றைப் பத்திரமாகப் பிடித்து தொங்கியப் படியே ஹெலிகாப்டரில் ஏறும் பரபரப்பான காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.