தாஜ்மஹால் கட்டிய கணவர்… வாழும்போதே அன்பு மனைவிக்கு காதல் பரிசு!

  • IndiaGlitz, [Tuesday,November 23 2021]

முகலாயர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஷாஜகான் தன்னுடைய காதலி மும்தாஜ் இறந்தபின்பு அவருக்காக காதல் சின்னமான தாஜ்மஹாலை உருவாக்கினார். இதற்காக உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் 22 ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு பளிங்கு மாளிகையை உருவாக்கினார். இது தற்போது காதலின் அடையாளமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மும்தாஜ் உண்மையிலேயே இறந்ததாகக் கூறப்படும் மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் அன்பு கணவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்காக உண்மையான தாஜ்மஹாலை உருவாக்கியுள்ளார். புர்ஹான்பூரில் கல்வி நிறுவனத்தை நடத்திவரும் ஆனந்த் சோக்சே என்பவர் தனது மனைவி மஞ்சுஷா சோக்சேவிற்கு காதல் பரிசு கொடுக்க நினைத்திருக்கிறார்.

இதற்காக மும்தாஜ் இறந்ததாகக் கூறப்படும் புர்ஹான்பூரில் கடந்த 3 வருடங்களாக முயன்று தாஜ்மஹால் அமைப்பில் புது வீடு ஒன்றை கட்டிமுடித்துள்ளார். இந்தூர் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கட்டிடக்கலை நிபுணரின் அறிவுரையின் பேரில் உருவாக்கப்பட்ட இந்த வீடு ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் போன்றே காட்சியளிக்கிறது.

4 பிரம்மாண்ட அறைகள் கொண்ட இந்த வீட்டில் தாஜ்மஹால் போன்ற உயர்ந்த கோபுரம் மற்றும் பூம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தியான அறை, நூலகம் போன்றவற்றைக் கொண்ட இந்த வீட்டில் ஒளிவீசும் விளக்குகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் அன்பு மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிக்கொடுத்த ஆனந்த் சோக்சே இந்தியா முழுக்க பிரபலமடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.