15 வருட உழைப்புக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்… வைரம் கிடைத்த குஷியில் நெகிழ்ந்த ஊழியர்!
- IndiaGlitz, [Friday,September 24 2021]
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பல ஆண்டுகளாக வைரம் தோண்டும் சுரங்களில் வேலைப்பார்த்து வருகிறார். இதற்காக வைரம் இருப்பதாகக் கணிக்கப்படும் சிறுசிறு சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்து வருடம்தோறும் அதில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 15 வருடத்திற்குப் பிறகு அந்த ஊழியருக்கு 40 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ம.பியின் பன்னா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வைரம் தேடும் பணிகளில் அங்குள்ள பெரும்பலானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசாங்கத்திடம் இருந்து சுரங்கத்தை குத்தகைக்கு எடுக்கும் பழக்கமும் அங்குள்ளது. அந்த வகையில் ரத்தன்லால் பிரஜாபதி எனும் ஊழியர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து வைரம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது 8.22 கேரட் மதிப்பிலான சிறு வைரத்தைக் கண்டுபிடித்து உள்ளார்.
ரூ.40 லட்சம் மதிப்பு கொண்டது எனக் கணிக்கப்படும் இந்த வைரத்தை கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் ஏலத்தில் விட்டு வைரத்திற்கான ராயல்டி மற்றும் வரியைப் பெற்றுக்கொண்டு மீதமுள்ள 37.3 லட்சம் ரூபாயை ரத்தன்லாலுக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 15 வருடக் காத்திருப்புக்கு விடிவு கிடைத்து விட்டதாக தற்போது ரத்தன்லாலும் அவரது நண்பர்களும் மிகுந்த சந்தோஷத்தில் உலா வருகின்றனர்.