திரை முன்னோட்டம். மாதவனின் 'இறுதிச்சுற்று
- IndiaGlitz, [Thursday,January 28 2016]
கடந்த 2000ஆம் ஆண்டு சாக்லேட் பாய் ஆக மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான மாதவன், பல இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். அவர் நடித்த மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ரன், அன்பே சிவம், தம்பி போன்ற வித்தியாசமான படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த 'வேட்டை' படத்திற்கு பின்னர் கோலிவுட் பக்கம் திரும்பாமல் இருந்த மாதவனை சுதா என்ற பெண் இயக்குனர் மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ள திரைப்படம்தான் 'இறுதிச்சுற்று'. இந்த படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.
ஜெயம் ரவியின் 'பூலோகம்' படத்திற்கு பின்னர் தமிழில் வெளிவரும் மற்றொரு பாக்சிங் சம்பந்தப்பட்ட படம் 'இறுதிச்சுற்று'. மாதவன் பாக்ஸராக நடித்திருக்கும் இந்த படத்தின் நாயகி ரித்திகா சிங், உண்மையிலேயே ஒரு பாக்ஸர் என்பது படத்திற்கு அமைந்துள்ள கூடுதல் பலம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் இயக்குனரின் கைவண்ணத்தில் அமைந்துள்ள பாக்சிங் படத்தில் ஒரு பெண் பாக்ஸர் நடித்துள்ளதும், ஐந்து வருட இடைவெளிக்கு பின்னர் மாதவன் ரீ எண்ட்ரி ஆகும் படம் என்பதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த நாசர் மற்றும் ராதாரவி இருவரும் இணைந்து இந்த படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகி அனைத்து எப்.எம் வானொலிகளிலும் ஒலித்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக 'வா மச்சானே', ஏய் சண்டக்காரா' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழ், மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் இந்தியா முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை நாளை பார்க்கலாம்.