ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 6 படங்களில் பணியாற்றிய ஒரே நபர்
- IndiaGlitz, [Saturday,July 25 2015]
கோலிவுட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை அள்ளி தந்த படங்கள் என்று பார்த்தால் அவை எந்திரன், துப்பாக்கி, கத்தி, ஐ, லிங்கா மற்றும் பாகுபலி ஆகிய ஆறு படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். இந்த ஆறு படங்களும் வசூலில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த திரைப்படங்கள் என்ற பெருமையை பெற்ற படங்கள். இந்நிலையில் இந்த ஆறு படங்களிலும் ஒரு நபர் பணிபுரிந்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் கவியரசு வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி இந்த ஆறு படங்களிலும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ஆம் வருடம் எந்திரன் படத்தில் 'இரும்பிலே ஒரு இருதயம்' என்ற பாடலின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமான மதன்கார்க்கி, அதன் பின்னர் விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்காக 'கூகுள் கூகுள்' என்ற பாடலையும் கத்தி படத்திற்காக 'செல்பி புள்ளே' என்ற சூப்பர் ஹிட் பாடலையும் எழுதினார். பின்னர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த 'லிங்கா' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான மெட்டு ஒன்றுக்கு 'மோனோ கேஸோலினா' என்ற பாடலை எழுதினார். மேலும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'ஐ' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அய்லா அய்லா' என்ற பாடலை எழுதினார். பின்னர் தற்போது வெளிவந்துள்ள 'பாகுபலி' படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு வசனமும் பாடல்களும் எழுதியுள்ளார்.
இவ்வாறு ஆறு நூறு கோடி கிளப் படங்களில் பணியாற்றிய மதன்கார்க்கி, இன்னும் பல நூறு கோடி வசூல் படங்களில் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.