முதல்வரிடம் கணினித் தமிழ் விருது பெற்ற பிரபல பாடலாசிரியர்
- IndiaGlitz, [Thursday,February 21 2019]
பிரபல பாடலாசிரியரும், வசனகர்த்தாவும், கவிப்பேரரசு வைரமுத்துவின் மகனுமான மதன்கார்க்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் இருந்து 2017-ம் ஆண்டுக்கான கணினித் தமிழ் விருதினை பெற்றுள்ளார்.
இந்த விருது பெற்றது குறித்து மதன்கார்க்கி கூறியபோது, '2017 ஆண்டுக்கான முதல்வர் கணினி விருது கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பிரிபொறி’ மென்பொருளுக்குக் கிடைத்துள்ளது. இது தமிழ்க் கணினி ஆய்வில் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும் என் குழுவுக்குக் கிடைத்துள்ள ஊக்கம். முதல்வர் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சித் துறைக்கும் எங்கள் நன்றி' என்று கூறியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கிய கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட மென்பொருள் பிரிபொறி. இது 280 பெயர்ச்சொல் விதிகள், 880 வினைச்சொல் விதிகள் மற்றும் 50 கூட்டு சொல்விதிகள் கொண்டு 10 கோடி தமிழ்ச்சொல் உருபனியும் வேறுபாடுகளை ஆய்ந்து அதன் வேர்ச்சொற்களை கண்டறியும் கருவியாகும்.
6 நொடிகளில் ஒன்றைரை லட்சம் தமிழ்ச்சொற்களை பிரிக்கும் திறனை கொண்ட இந்த பிரிபொறி மென்பொருள் கூகுள், யாஹூ, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களில் தேடலை பன்மடங்கு மேம்படுத்த உதவுகிறது. 15 ஆயிரம் நூல்களை கொண்ட ஒரு மின் நூலகத்தை 22 நிமிடங்களில் இந்த பிரிபொறி பகுத்தாய்ந்து தேடல் வசதிகளை அறியும் ஆற்றல் கொண்டது