'பாகுபலி'யில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் - மதன்கார்க்கி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படம் இந்திய அளவில் பல சாதனைகளை செய்து வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக கூறி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று மதுரையில் பாகுபலி திரைப்படம் ஓடும் ஒரு தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வந்த செய்தியையும் பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழ் வசனம் எழுதிய மதன்கார்க்கி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"பாகுபலி திரைப்படத்தின் இறுதிக் காட்சி வசனத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை சிலர் மனதைப் புண்படுத்தியதாகவும், அதனால் சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
"என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது..." என்று வரும் வசனத்தில், 'பகடைக்குப் பிறந்தவன்' என்ற வாக்கியத்தை தாயக்கட்டையால் ஆடப் படும் சூதாட்டத்தின் தோல்விக்குப் பிறந்தவன் என்ற பொருளில்தான் எழுதியிருந்தேன். அது ஒரு சமூகத்தின் பெயர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
சாதிப் பிரிவுகள் வேண்டாம், அனைவரும் சமம் என்று இன்னொரு காட்சியில் பேசும் கதையின் நாயகன், எந்தச் சாதியையும் இழித்துப் பேச மாட்டான். இழிவு செய்வது எங்கள் நோக்கமில்லை. படை எடுத்து வருபவர்களை எந்த இனத்தைச் சார்ந்தவர்களாகவும் காட்ட வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு என்று புதிய ஒரு மொழியை உருவாக்கினோம்.
யார் மனமும் புண்படக் கூடாது என்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டோம். ஒரு சமூகம் புண்படுவதற்குக் காரணமான அந்தச் சொல்லைப் படத்தில் இருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அந்தச் சொல் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதில் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு மதன்கார்க்கி அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மதன்கார்க்கியின் இந்த விளக்கத்தை அடுத்து போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்வார்கள் என படக்குழுவினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments