ஒரு நல்ல காரியத்திற்காக இணைந்த மதன்கெளரி - புகழ்.. வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

’குக் வித் கோமாளி உள்பட சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தற்போது சினிமாவிலும் நடித்து வரும் புகழ் மற்றும் பிரபல யூடியூபர் மதன் கௌரி ஆகிய இருவரும் ஒரு நல்ல காரியத்திற்காக இணைந்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மதன் கௌரி மற்றும் புகழ் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோவில் ஆர்த்தி என்ற இளம்பெண் ஒருவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்ததாகவும் அவரது உயிரை காப்பாற்ற கொடுக்கப்பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக தற்போது அவரது இரண்டு இடுப்பு மூட்டுகளும் பாதிக்கப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான அறுவை சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் இதர மருத்துவ செலவுக்கு 10 லட்சம் ரூபாய் செலவாக வேண்டிய நிலை இருப்பதாகவும் நாங்கள் எங்களால் முடிந்ததை கொடுத்துள்ளோம், நீங்களும் உங்களால் முடிந்ததை கொடுத்து ஆர்த்தி மீண்டும் உடல்நலம் தேற உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆர்த்தி என்ற பெண்ணின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருப்பதால் அவரால் இவ்வளவு பெரிய செலவை தாங்க முடியாது என்றும் நாம் எல்லோரும் சேர்ந்து உதவி செய்து அந்த பெண்ணை காப்பாற்றுவோம் என்றும் அந்த வீடியோவில் மதன் கெளரி, புகழ் தெரிவித்துள்ளனர்.