குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பின் மெழுகுச்சிலை… கேள்விக்குறியுடன் ஊடகங்கள்!!!
- IndiaGlitz, [Monday,November 02 2020]
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் புகழ்பெற்ற மடாமே மெழுகு சிலை அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியத்தில் பல உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அதில் முன்னாள் அதிபர் ஒபாமா, ஜெர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் போன்றோரின் சிலைகளும் வைக்கப்பட்டு இருக்கின்றன. அதைப் போலவே இந்த அருங்காட்சியத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப்பின் மெழுகுச் சிலையும் வைக்கப்பட்டது. அந்த மெழுகு சிலை தற்போது அகற்றப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாகப் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இச்செயலுக்கு அவரது ஆதரவாளர்கள் பலரும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காரணம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்ட நிலையில் நாளை இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மடாமே அருங்காட்சியத்தின் நிர்வாகம் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவச்சிலையை அகற்றி உள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ஊடங்கள் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் அருங்காட்சி நிர்வாகம் அதிபர் ட்ரம்ப்பின் சிலையை குப்பைத் தொட்டியில் வீசியதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். அதாவது டொனால்ட் ட்ரம்ப்பின் மீதான வெறுப்புணர்வு காரணமாகவே நிர்வாகம் இப்படி செய்திருக்கலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து டொனால்ட் ட்ரம்ப்பின் மெழுகு சிலையை பழுது நீக்கும் வேலைக்காகவே அகற்றி இருக்கிறோம், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அருங்காட்சியத்தின் நிர்வாகம் கூறியதாக Reuters செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பின் மெழுகுச் சிலை உண்மையிலேயே குப்பை தொட்டியில் வீசப்பட்டதா அல்லது நிர்வாக வேலைக்காக அகற்றப்பட்டதா என்பதைக் குறித்து தெளிவான விளக்கம் எதுவும் வெளியாக வில்லை. இந்நிலையில் ட்ரம்ப் மீது எதிர்மறை கருத்துக் கொண்ட பலரும் “அவருடைய சகாத்பம் முடிந்து விட்டது, அதற்கான அடையாளமாகவே அருங்காட்சியகம் சிலையை அகற்றி இருக்கிறது“ எனக் கூறி வருகின்றனர்.