தனிக்குழு அமைத்து, உலகிலேயே அதிகளவு நன்கொடையை வாரி வழங்கிய பெண்மணி!!!
- IndiaGlitz, [Thursday,December 17 2020]
அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கொரோனா காலத்தில் உலகிலேயே அதிகளவு தொகையை நன்கொடையாக வாரி வழங்கி இருக்கிறார். மேலும் தன்னுடைய கஜானா காலியாகும் அளவிற்கு இவர் நன்கொடைகளை வழங்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் இவர் வழங்கிய தொகை 5.9 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 43 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
கொரோனா காலத்தில் பொது மக்களின் அன்றாடம் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொருளதார சீர்குலைவு, வேலையிழப்பு, வறுமை, சுகாதாரப் பிரச்சனை என அடுத்தடுத்து இந்த உலகமே சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும்போது பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் முன்பைவிட பன்மடங்கு பெருகிவிட்டது. இந்நிலையில் பெரும் பணக்காரர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள இடைவெளியை போக்குவது கடினமான காரியம். அதை சமன்படுத்த வேண்டும் என்று கருத்து கூறி இருக்கிறார் மெக்கன்சி ஸ்காட்.
மேலும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களுக்கு உதவ இவர் பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடைகளை வழங்கி உள்ளார். இத்தகைய அமைப்புகளை அடையாளம் காண்பதற்கு என்றே தனிக் குழுவையும் அமைத்து அதன்மூலம் தகுதியான அமைப்புகளுக்கு இவர் நன்கொடைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் 6,500 அமைப்புகளை ஆய்வுசெய்த இந்தக் குழு இறுதியில் 384 அமைப்புகளுக்கு நன்கொடைகளை வழங்கி இருக்கிறது.
ஒரு எழுத்தாளராகவும் தொழிலதிபராகவும் இருந்து வரும் மெக்கன்சி ஸ்காட்டின் சொத்து மதிப்பு தற்போது அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜெஃப் பெசோஸிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற இவருக்கு அமேசான் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் இழப்பீடாக வழங்கப்பட்டது. அதையடுத்து 23.6 பில்லியன் டாலராக இருந்த இவரது சொத்து மதிப்பு தற்போது 60.7 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கும் இவர் கடந்த ஜுலை மாதம் 1.7 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கி இருந்தார். அதையடுத்து தற்போது 4.2 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கி உள்ளார். இவரைத் தவிர பில்கேட்ஸ், வாரன்பஃபெட், மார்க் சுகர்பெர்க் போன்றோரும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். ஆனால் இந்தப் பட்டியலில் 5.6 பில்லியன் டாலர் தொகையை வழங்கி உலகிலேயே அதிக நன்கொடை வழங்கிய பெண்மணியாக மெக்கன்சி ஸ்காட் விளங்குகிறார்.