Maayavan Review
'மாயவன்' - மர்மம் கலந்த டெக்னாலஜி படம்
பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனராக அறிமுகமான படம், மாநகரம் வெற்றிக்கு பின்னர் சந்திப் கிஷான் நடித்த படம் மாயவன், டீசர், டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
காவல்துறை அதிகாரி சந்தீப் கிஷான், ஒரு திருடனை பிடிக்க விரட்டியபோது, ஒரு வீட்டில் தீனா தனது மனைவியை கொலை செய்வதை நேரில் பார்க்கிறார். அவரை பிடிக்க எடுக்கும் முயற்சியில் தீனா கொல்லப்படுகிறார். இந்த நிலையில் தீனா தனது மனைவியை கொலை செய்த அதே பாணியில் பிரபல நடிகை, விஞ்ஞானி, உளவியல் நிபுணர் என தொடர் கொலைகள் நடக்கின்றது. இறந்து போன தீனா எப்படி கொலை செய்ய முடியும் என போலீசார் குழப்பத்தில் இருக்கும்போது ஒரு திருப்புமுனையாக இதெல்லாம் ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சி முடிவால் ஏற்பட்ட விளைவு என்று தெரிய வருகிறது. அதன் பின்னர் அடுத்தடுத்த கொலைகளை சந்தீப் கிஷான், மனநல மருத்துவர் லாவண்யா திரிபாதியுடன் இணைந்து எப்படி தடுக்கின்றார் என்பதுதான் மீதிக்கதை
சந்திப் கிஷானின் உடல்மொழி காவல்துறை அதிகாரிக்கு பொருத்தமாக உள்ளது. நடிப்பும் ஓகே. சின்ன வயதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவதிப்படுவது, லாவண்யா திரிபாதியுடன் முதலில் மோதல் பின்னர் புரிதல், கொலையாளி யார் என்று தெரிந்தவுடன் காட்டும் முகபாவம் என்று ஒரு ஹீரோவாக சந்தீப் தேறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்
லாவண்யா திரிபாதி வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அவருடைய கேரக்டர் படத்திற்கு முக்கியத்துவம் தருகிறது. கதையின் திருப்பங்களுக்கு இவரது கேரக்டரை சரியாக இயக்குனர் பயன்படுத்தியுள்ளார்.
சந்தீப் கிஷானுக்கு அடுத்து நடிப்பில் பாராட்டு பெறுபவர் பகவதி பெருமாள். ஹீரோவுடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் வெயிட்டான கேரக்டர். டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், ஜெயப்பிரகாஷ் ஆகியோர்கள் படத்தின் திருப்புமுனைக்கு பயன்படுகின்றார்கள். மூவரின் அனுபவ நடிப்பு படத்தின் கதையோட்டத்திற்கு உதவுகிறது. கே.எஸ்.ரவிகுமார் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் இன்றைய டெக்னாலஜியால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மனதில் பதியும் வகையில் கூறி கைதட்டல் பெறுகிறார்
சித்தர்கள் பயன்படுத்திய கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை நவீன டெக்னாலஜியுடன் நம்பும் வகையில் திரைக்கதை அமைத்ததில் இயக்குனராக சி.வி.குமார் வெற்றி பெறுகிறார். ஆராய்ச்சி கூடத்தின் பிரமாண்டத்தை காட்டும் போது படத்தின் தரத்திற்காக ஒரு தயாரிப்பாளராக பணத்தை அள்ளி வீசியுள்ளார் என்றும் தெரிகிறது. முதல் பாதியில் கொலையாளி யார்? என்பதை நோக்கி விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, கொலையாளி யார் என்பது தெரிந்தவுடன் அவர் எதற்காக கொலை செய்கிறார்? என்பதை நோக்கியே கதை செல்வதால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு குறைகிறது. இருப்பினும் காட்சிகள் அனைத்தும் நம்பும் வகையில் உள்ளதால் ஏமாற்றம் இல்லை. சந்தீப் கிஷானின் சிறுவயது பயம், இந்த படத்தின் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் உள்ளது என்பது ஒரு குறையாக தெரிகிறது. சந்தீப் கிஷான் மீண்டும் பணியில் சேருவது நல்லதல்ல என்று ஆலோசனை வழங்கும் திரிபாதி, பின்னர் அவர் விசாரணை செய்யும் வழக்கிற்கு உதவுவதும் ஒரு நெருடல். சாகாவரம் பெற முயற்சிக்கும் விஞ்ஞானி கேரக்டர் மூலம் இயற்கையை மாற்ற மனிதன் முயற்சி செய்வதால் ஏற்படும் விளைவுகள் சரியாக கூறப்பட்டுள்ளதால் இறுதியில் பாராட்ட முடிகிறது.
விஞ்ஞானியின் ஆய்வுக்கூட செட் அமைத்த ஆர்ட் டைரக்டர் கோபி ஆனந்தை பாராட்டியே தீர வேண்டும். ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் நிமிர வைக்கின்றார் ஜிப்ரான். நலன் குமாரசாமியின் திரைக்கதை வசனம் படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது. ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், எடிட்டர் லியோ ஜான் பால் ஆகியோர்களின் கச்சிதமான உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உணர முடிகிறது.
மொத்தத்தில் 'மாயவன்' மனதை மயக்க முயற்சிக்கின்றான்
- Read in English