Download App

Maari 2 Review

'மாரி 2': 'மாஸ்' மிஸ் ஆன 'மாரி'

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி' திரைப்படம் ஒரு ஜாலியான காமெடி கலந்த டான் படம் என்பதால் தனுஷ் ரசிகர்கள் அந்த படத்தை ரசித்தார்கள். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த 'மாரி 2' திரைப்படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்

வழக்கம்போல் ஏரியாவில் மாஸ் காட்டும் மாரி, அவருடன் எப்போதும் இருக்கும் ரோபோ சங்கர், வினோத், மாரியை சுற்றி சுற்றி வந்து லவ் பண்ணும் ஆனந்தி, மாரியின் உயிர் நண்பன் கிருஷ்ணா என கதை ஜாலியாக நகர்ந்து கொண்டிருக்கும்போது, பழைய பகையை மனதில் வைத்து மாரியை பழி வாங்க வருகிறார் டொவினோ தாமஸ். அவரால் மாரிக்கு சில இழப்புகள் ஏற்பட, அந்த இழப்புகாக மாரி டொவினோவை பழிவாங்கினாரா? அல்லது வேறு முடிவு எடுத்தாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை



மாரியாக வரும் தனுஷின் நடிப்பில் முதல் பாகத்தில் உள்ள நடிப்பில் பாதி கூட இல்லை. காஜல் அகர்வால் கடைக்கு சென்று அலப்பரை கொடுப்பது, ஆட்டோ ஓட்டும் காட்சிகள் எல்லாம் 'மாரி' படத்தில் விழுந்து விழுந்து ரசித்த காட்சிகள். அப்படியான காமெடி காட்சிகள் எதுவும் இல்லாமல் நகரும் கதையில் தனுஷின் நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் ரொம்ப குறைவு. அதிலும் முதலில் காதலை வெறுப்பது, பின் திடீரென காதலை விரும்புவது, திடீரென 'பாட்ஷா' மாணிக்கமாக மாறியது போல் சாதுவாக மாறுவது பின் மீண்டும் திடீரென ரெளடியாக மாறுவது கடைசியில் ஒரு சிக்ஸ்பேக் உடலமைப்பில் ஒரு சண்டையும் போட்டு தனது ரசிகர்களை கவர முயற்சித்துள்ளார்.

படத்தின் ஒரே ஆறுதல் சாய்பல்லவி கேரக்டர். அராத்து ஆனந்தி கேரக்டரில் துறுதுறுவென இருக்கின்றார். மாரியை விழுந்து விழுந்து காதலிப்பதில் எந்த செயற்கைத்தன நடிப்பும் இல்லை. ஆனால் இரண்டாம் பாதியில் அவரையும் வீல் சேரில் உட்கார வைத்துவிடுகின்றனர். அதோடு கதையும் வீல்சேரில் உட்கார்ந்துவிடுகிறது.



மாரிக்கு நண்பனாகவும், துரோகியாகவும் மீண்டும் நண்பனாகவும் நடித்திருக்கும் கிருஷ்ணாவின் நடிப்பு ஓகே என்றாலும் அவரது கேரக்டர் குழப்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து தப்பிக்கும் முதல் காட்சியில் டொவினோ தாமஸை ரொம்ப கொடூரமாக காண்பிக்கின்றனர். சரி, தனுஷுக்கு நல்ல டஃப் கொடுக்கும் ஒரு வில்லன் என்று நினைத்தால் அதன் பின்னர் தனுஷே கிளைமாக்ஸில் கூறுவது போல பக்கம் பக்கமாக வசனம் பேசியே கொல்கிறார்.

வழக்கம்போல் வரலட்சுமி சரத்குமாருக்கு நான்கே நான்கு காட்சிகள். திறமையான நடிகையான வரலட்சுமிக்கு தீனிபோடும் வகையில் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்பது அவரது குற்றம் இல்லை. எந்த ஊரில் போலீஸ் அதிகாரி முன் கலெக்டர் நின்றுகொண்டு பணிவுடன் பேசுகிறார் என்பதை இயக்குனர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்



ரோபோ சங்கரும் வினோத்தும் வழக்கம் போல் கவுண்ட்டர் கொடுத்து சிரிக்க வைக்கின்றனர். முதல் பாகத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த காளி வெங்கட்டுக்கு இந்த படத்தில் ஒரே ஒரு சுமாரான காட்சி மட்டுமே. அறந்தாங்கி நிஷா சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

யுவன்ஷங்கர்  ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் முதல் பாகத்திற்கு இணையாக போட்டுள்ளார் என்பது ஒரு திருப்தியான விஷயம்

பொதுவாக கோலிவுட் திரையுலகில் ஹிட்டான படத்தை தான் இரண்டாம் பாகமாக எடுத்து வருகின்றனர். ஆனால் சுமாராக ஓடிய ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த இயக்குனர் பாலாஜி மோகனின் தைரியத்திற்கு ஒரு பாராட்டுக்கள். முதல் பாதியில் கொஞ்சம் காமெடி, சாய்பல்லவி ரொமான்ஸ் என ஓரளவு கதையை நகர்த்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் அவரும் குழம்பி ரசிகர்களையும் குழப்பி ரணகளப்படுத்தியுள்ளார். மாரி நல்லவனாக மாறிவிட்டார் என்று சொன்னபோதே சின்னக்குழந்தை கூட சொல்லிவிடும் அவர் மீண்டும் மாரியாக மாறிவிடுவார் என்பதை. அதையும் ஒரு டுவிஸ்ட் போல் நீட்டித்து பொறுமையை சோதிக்கின்றார். 'இல்லாத இன்பார்மரை சில நிமிடங்கள் டுவிஸ்ட் வைத்து அதையும் ஏமாற்றிவிட்டார். மேலும் முதல் பாகத்தில் மாரி' வளர்த்த புறாக்கள் எல்லாம் இந்த படத்தில் காணாமல் போய்விட்டது ஏன் என்றும் தெரியவில்லை.



இந்த படத்தில் அடிக்கடி ஒரு வசனம் வருகிறது. 'நம்ம சந்தோசத்துக்காக மத்தவங்கள கஷ்டபடுத்தகூடாதுன்னு'. அந்த வசனத்தை திரைக்கதை எழுதும்போது இயக்குனர் கொஞ்சம் யோசித்திருந்தால் எதிர்பார்ப்பில் வந்த ரசிகர்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள்.  தமிழ்ப்படங்களில் வரும் எல்லா வில்லன்களும் அடிமுட்டாள்களாக இருப்ப்து போன்ற காட்சிகள்  இன்னும் எத்தனை படங்களில் தான் வரும் என்று தெரியவில்லை. மாரியை கொல்ல நிறைய சந்தர்ப்பம் கிடைத்தும் 'உன்னை அணுஅணுவாக துடிக்க வைத்து சாகடிப்பேன் என்ற பழங்கால வசனத்தையே இந்த படத்திலும் வில்லன் பேசி கோட்டை விடுகிறார். மொத்தத்தில் இயக்குனர் உண்மையிலேயே படம் பார்க்க வந்த ரசிகர்களை 'செஞ்சிட்டாரு' என்றுதான் சொல்ல வேண்டும்

சாய்பல்லவியின் நடிப்பு மற்றும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையை விரும்புகிறவர்கள் மட்டும் ஒருமுறை பார்க்கலாம்

Rating : 2.5 / 5.0