ஓடிடியில் 'மாநாடு' ரிலீஸா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது என்பதும் அந்த படப்பிடிப்பும் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவின் ’மஹா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருப்பது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்ட நிலையில் ‘மாநாடு’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாகப் போவதாக செய்திகள் கசிந்து வருகிறது. இந்த செய்தியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார்
‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளிவரும் என்றும் தான் உறுதியாக இருப்பதாகவும், கொரோனா நிலவரம் சரியானால் ஆயுதபூஜை விடுமுறை நாளில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ‘மாநாடு’ திரைப்படம் எத்தனை மாதங்கள் காலதாமதமானாலும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரன், பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.