'இந்தியன் 2' விபத்திற்கு பின் சுதாரித்த 'மாநாடு' தயாரிப்பாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பது தெரிந்ததே. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட மூவர் பலியான இந்த சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த விபத்து குறித்து பல்வேறு கோலிவுட் திரையுலகினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதில் முக்கியமாக குறிப்பிட்ட ஒரு விஷயம் படத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதுதான். தயாரிப்பாளர் இதற்கு பொறுப்பேற்று படத்தில் பணியாற்றும் ஹீரோ முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்றும் இது தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி தயாரிப்பாளருக்கும் பாதுகாப்பானது என்றும் பல திரையுலகினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சுமார் ரூபாய் 8 லட்சம் செலவு செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

படப்பிடிப்பின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இன்சூரன்ஸ் அதிலிருந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அனைத்து தயாரிப்பாளரும் இதனை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.