மாநாடு - புதுமையான ஒரு உற்சாக பயணம்
சிம்பு மற்றும் வெங்கட் பிரபு ஜோடியின் மேஜிக் காம்போவை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் சுமார் மூன்று வருடங்களாக காத்திருக்கிறார்கள். ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்ஷன் படத்தின் கிளைமாக்ஸ் போல கடைசி நிமிட திக் திக் தடைகளை மீறி இன்று ஒரு வழியாக வெளியானது 'மாநாடு'. ஏகத்துக்கும் எகிரி இருக்கும் எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்ததா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
அப்துல் காலிக் (சிம்பு) நெருங்கிய நண்பரான பிரேம்ஜியின் முஸ்லிம் காதலிக்கு ஊட்டியில் நடைபெறும் திருமணத்தில் சென்று அவளை கடத்த வேண்டி துபாயில் இருந்து கோயம்புத்தூர் வருகிறார். மனப்பெண்ணை கூட்டி கொண்டு காரில் தப்பிக்க எதிர்பாராத விதமாக ரஃபீக் (டேனியல் அன்னி போப்) எங்கிற நபர் மீது மோதி விடுகிறார்கள். அவர்கள் படுகாயமடைந்த ரஃபீக்குக்கு உதவ முற்படுகையில், ஒரு உயர் போலீஸ் அதிகாரி தனுஷ்கோடி (எஸ்.ஜே. சூர்யா) வந்து அவர்களைக் கைது செய்கிறார். நண்பர்களை பணயக் கைதிகளாக பிடித்து, பொது மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசும் முதல்வர் அறிவழகனை (எஸ்ஏசி) படுகொலை செய்ய தனுஷ்கோடி காலிக்கை கட்டாயப்படுத்துகிறான். காலிக், தனது நண்பர்களை காப்பாற்ற, முதல்வரைக் சுட்டு கொன்று, பாதுகாப்புப் படையினரால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் அதிர்ச்சிகரமாக காலிக் தான் துபாயிலிருந்து வந்த விமானத்திலேயே கண் விழிக்கிறான். அவன் ஒரு நேர வளையத்தில் (டைம் லூப்) சிக்கியிருப்பதைக் உனர்கிறான். அதே நாள் அதே சம்பவங்கள் திரும்பத் திரும்பச் அவனுக்கு நிகழ்கிறது. அவன் தன் நண்பர்களைக் காப்பாற்றுகிறானா இல்லையா, அவனால் வளையத்தை உடைக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் 'மாநாடு' திரைக்கதை.
சிம்பு கடந்த சில வருடங்களாக மீண்டும் வருவேன் என்று சொல்லி கொண்டிருந்தார், இங்கே அவர் உறுதியாக திரும்பி வந்துவிட்டார் என்று ஆணித்தரமாக முழங்குகிறது 'மாநாடு' படத்தில் அவருடைய அசுர நடிப்பு. அனைத்து துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒய்.ஜீ மகேந்திராவை குழப்பி எஸ் ஜே சூர்யாவை அலற விடும் காட்சியில் காமடியில் கலக்கும் சிம்பு, ஒரு குடோனில் நடக்கும் அபாரமான சண்டைக்காட்சியில் பல முறை இறந்து அவரது அடுத்த நகர்வை ஊகித்து வெல்லும் இடத்தில் ஆக்ஷனில் அதகளம் பண்ணுகிறார். எச் ஜே சூர்யா கை ஓங்கிவிட பலமற்ற நிலையில் சிம்பு கதறி அழும் காட்சியில் நெகிழ வைக்கிறார். மொத்தத்தில் சிம்பு ஒரு பஞ்ச் டயலாக் கூட இல்லாமல் செயலில் இறங்கி படம் முழுக்க கொல மாஸ் காட்டியிருக்கிறார். அயோக்கிய போலீஸ் தனுஷ்கோடியாக வரும் எச் ஜே சூர்யா சிம்புவுக்கு சரியான சவாலாக படமுழுக்க முத்திரை பதிக்கிறார். ஒவ்வொரு முறையும் தனது திட்டங்களை சிம்பு தவிடி பொடியாக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை வளர்த்து பின் கிளைமக்ஸில் டென்ஷன் தலைக்கேறி ஒரு சைக்கோவாக மாறி அவர் செய்யும் கலாட்டா ரசிகர்களை குஷிப்படுத்தி விடுகிறது. அவர் பேசும் அந்த "வந்தான் சுட்டான் செத்தான் ரீபீட்டு" வசனத்துக்கு விண்ணை பிளக்கிறது தியேட்டரில் விசில் சத்தம். மூத்த நகைச்சுவை நடிகர் ஒய்.ஜீ மகேந்திராதான் இந்த படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ். கிளைமாக்ஸில் நெருங்க நெருங்க சிம்புவுக்கும் சூர்யாவுக்கும் சரிசமமாக நின்று நடிப்பில் அசத்துகிறார். அழகாகத் தோற்றமளிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் கதைக்கு தேவையான கதாபாத்திரத்தில் அளவாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே மனதில் பதிகிறார். SAC மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் படத்தில் குறிப்பிடத்தக்க மைலேஜ் பெற்ற மற்ற சீனியர்கள். அரவிந்த் ஆகாஷ், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் மற்றும் டேனியல் அன்னி போப் ஆகியோர் தேவையானதைச் செய்து கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறார்கள்.
'மாநாடு' படத்தில் சிறப்புகளில் முதன்மையானது சிம்புவுக்கும் எஸ்.ஜே.க்கும் இடையிலான அந்த் நீயா நானா போட்டிதான். புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட அந்த கதாபாத்திரங்கள் இரண்டு நடிகர்களின் நடிப்பு திறமைக்கும் சரியான தீனியாக அமைகிறது. சிம்புவுக்கான பின்னணிக் கதை மிகவும் வசதியாக இருந்தாலும் பார்வையாளர்களின் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி அந்த கால சுழலில் பயணிக்க வைக்க உதவுகிறது. குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களையே தீவிரவாதிகளாக்கும் அரசியலையும் அவர்கள் அதனால் அடையும் பாதிப்புகளையும் நேரடியாக கண்டித்திருக்கிறது மாநாடு. ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக்காட்சிகள் புதுமையாகவும் மின்னல் வேகத்திலும் அமைக்கபட்டு படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒரே மாதிரியான காட்சிகள் ஒரு டஜன் முறைக்கு மேல் திரும்பத் திரும்ப வந்தாலும், அவைகளில் சின்ன சின்ன மாறுதல்களை புகுத்தி கதையை முன்னோக்கித் நகர்த்தியிருக்கும் உக்தி பாராட்ட தக்கது. படத்தொகுப்பாளர் பிரவீன் கெ எல் கைவண்ணத்தில் பர பர என்று நகரும் காட்சியமைப்புகள் எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் செல்கிறது.
மாநாட்டில் மைனஸ் என்று பார்த்தால் துணை முதல்வர் முதல்வரை கொல்ல சதி திட்டம் தீட்டுவது என்பது என்பது தொன்னூறுகளில் வந்த 'உரிமை கீதம்' மற்றும் 'ஜெய் ஹிந்த்' போன்ற படங்களில் பார்த்து சலித்த ஒன்று. இவ்வளவு ஹை டெக் படத்தில் அந்த ஒரு விஷயம் பெரிய உறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக குடும்பத்தை பிடித்து வைத்து மிரட்டி ஒரு அப்பாவியை முதல்வரை கொல்ல பயன்படுத்தி கொள்ளும் காட்சிகள் உரிமை கீதம் படத்தில் வருவது போலவே இருக்கிறது. சிம்புவை போலவே எப்படி சூர்யாவும் டைம் லூப்புக்குள் வந்தார் என்பதை காட்டும் காட்சி அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை உற்சாகமாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. குறிப்பாக எஸ் ஜே சூர்யாவுக்கு அவர் போட்டிருக்கும் பி ஜி எம் அசத்தல். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் என்பதால் படத்திலும் சிறப்பாக இருக்கின்றன. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு பலே, ப்ரவீன் கே.எல் தனது தேர்ந்த படதொகுப்பு மூலம் படத்தை டாப் கியரில் பயனிக்க வைத்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனமான ஸ்கிரிப்டிங்கில் டைம் லூப் கான்செப்ட் சாதாரனமான மக்களுக்கு எளிதாக புரியும் படி சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக தனது அரசியல் பார்வையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில் கொஞ்ச காலம் காணாமல் போன அந்த பழைய 'மங்காத்தா' வெங்கட் பிரபு திரும்ப வந்து 'மாநாடு' நடத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு பல திசைகளில் இருந்தும் மிகுந்த வேதனைகளை அனுபவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு படத்தின் ரிசல்ட் நல்ல உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தீர்ப்பு: புதிய கதை களம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்த டைம் லூப்பில் தாராளமாக பயணம் செய்யலாம்.
Comments