மாமன்னன் - மாரி செல்வராஜின் தீவிர அரசியலோடு அப்பா மகன் பாசபிணைப்புக் கதையாகவும் ஜொலிக்கிறது
மாரி செல்வராஜின் மூன்றாவது படமான 'மாமன்னன்' வலுவான அரசியல் கருப்பொருளுடன் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்ற முத்திரையோடும், வடிவேலு முற்றிலும் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்ற தனித்தன்மையோடும் இன்று வெளிவந்திருக்கிறது. படத்தின் ஆழமான அரசியலும் குறியீடுகளும் எல்லா வெகுஜன ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே, 'மாமன்னனும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார் நின்று எப்படி ஆதிக்க சக்திகள் வன்முறையையும் பயஉணர்வையும் வைத்து கால காலமாக அவர்களை அடிமையாக்குகிறார்கள் என்பதறியே உரக்க பேசுகிறது. 'மாமன்னன்' (வடிவேலு) சேலத்தில் ஒரு தொகுதியில் இருக்கும் சாதுவான எம்.எல்.ஏ. இவரது மகன் அதி வீரன் (உதயநிதி ஸ்டாலின்) பன்றி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர் மற்றும் தற்காப்புக் கலை ஆசிரியரும் ஆவார். அவர் பதின் வயதில் சாதி வெறி பிடித்த மனித மிருகங்களால் தனது நண்பர்கல் மூவர் கொடூரமாகக் கொல்ல பட தன தந்தை ஒரு அரசியல்வாதியாக இருந்தும் நீதிக்காக போராடத் தவறிநார் என்ற காரணத்திற்காக அவரிடம் பேசாமலே ஒரே வீட்டில் வாழ்கிறார். மறுபுறம் ரத்னவேலு (ஃபஹத் ஃபாசில்) ஒரு கொடூரமான மனம் படைத்த அரசியல் பின்புலம் வாய்ந்த ஆதிக்க ஜாதி பெரியமனிதர். அவர் தனது தந்தையின் (அழகம் பெருமாள்) காலத்திலிருந்தே மாமன்னனை தன முன்னாள் உடகார கூட விடாமல் அடிமைப்படுத்தி வைத்திருப்பவர். அதி வீரனின் கல்லூரி தோழியம் சமூக சேவகியுமான கீர்த்தி சுரேஷ் ரத்னவேலுவின் சகோதரனால் (சுனில் ரெட்டி) ஒரு பிரச்சினைக்குள்ளாகிறாள். அவர் மீது மனதுக்குள் காதல் வைத்திருக்கும் அதிவீரன் உதவ போக ரத்னவேலுவுடன் நேரடியாக மோதுகிற நிலை ஏற்படுகிறது. இரக்கமற்ற அந்த மனித மிருகத்தின் கோர தாக்குதலில் இருந்து நியாயமாக செயல்படும் அப்பா மகன் தப்பித்தார்களா இல்லையா தங்களுக்குள் இருந்து வேற்றுமை சரி செய்ய படுகிறதா இல்லையா என்பதே 'மாமன்னன்' படத்தின் மீதி திரைக்கதை.
வடிவேலு முழுக்க முழுக்க குணச்சித்திர நடிகராக மறுபிறவி எடுத்திருக்கிறார் மாமன்னனாக. முதல் பாதியில் அவர் அநீதிக்கு எதிராக தனது இயலாமையால் அடக்க முடியாமல் அழும் காட்சி அவர் பண்பட்ட நடிப்பிற்கு ஒரு சாட்சியென்றால் பின் பாதியில் தன மகனால் தன சுயமரியாதையை மீட்டெடுத்து கம்பீரமாக நடைபோடும் போதும் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளுகிறார். அந்த பரபரப்பான இன்டெர்வல் காட்சியில் வைகைப்புயல் நடிப்பு புயலாக உருவெடுக்கிறது. படம் முழுக்க ஒடுக்கப்படும் அவர் கடைசியில் ஆளுமையாக மாறி அரியாசனத்தில் ஏறும் அந்த கிளைமாக்சில் புல்லரிக்க வைக்கிறார். பஹத் ஃபாசில் ஒரு சாதாரண ஜாதிவெறி வில்லன் கதாபாத்திரத்தை தன தனித்தன்மையான நடிப்பாற்றல் மூலமாகவும் உடல் மொழியாலும் படத்தையே ஆதிக்கம் செலுத்த வைத்திருக்கிறார். தம்மாத்தூண்டு உடலை வைத்துக்கொண்டு பாஹத் தன கண்களாலேயே மிரட்டும் அந்த வித்தையை ஒரு தீசிஸ் ஆகவே எழுதலாம். உதயநிதி ஸ்டாலின் எப்போதும் போல இயல்பான நடிப்பால் அதிவீரனை மனதில் பதிக்கிறார். அதே சமயம் அந்த அதி முக்கியமான இடைவேளை காட்சியில் வடிவேலுவுக்கும் பஹத்துக்கும் நடுவில் தானும் ஸ்கொர் செய்ய தவறவில்லை. கீர்த்தி சுரேஷுக்கு அதிகம் வேலையில்லை என்றாலும் கதையின் முக்கிய திருப்புமுனைக்கு காரணமான கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். வடிவேலுவின் மனைவியாக கீதா கைலாசம், ஃபஹத் மனைவியாக ரவீனா ரவி, அழகப் பெருமாள் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் வழங்கியுள்ளனர்.
'மாமன்னன்' படத்தில் சிறப்பாகச் வந்திருப்பது முதல் பாதி. கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் மோதல்களை நேர்த்தியாக அமைத்து, ஒரு ஆழமான இடைவேளையில் முடிவடைகிறது. வடிவேலுவை ஃபஹத்துக்கு இணையாக உட்கார வைக்க உதயநிதி வலியுறுத்தும் காட்சி சிறந்த எழுத்துக்கும் அதை காட்சியமைத்த விதத்திலும் ஓங்கி நிற்கிறது. நாயை ஆதிக்கத்தின் உருவாகவும் பன்றியை அடிமைத்தனத்தின் சின்னமாகவும் காட்சி படுத்திய விதம் பொறி பறக்கும் கவிதை. மாரி செல்வராஜின் வசனங்கள் ஒவ்வொன்றும் தீ பிழம்பாய் படத்திற்கு மிகுந்த வலு சேர்த்திருக்கிறது. ஒரு பக்கம் மேல் ஜாதிக்கும் கீழ் ஜாதிக்குமான பிரச்சினைகளை ஆழமாக சொன்னாலும் இன்னொரு புறம் தந்தை மகனுக்கான அந்த பாச போராட்டமும் திரைக்கதையில் சமமான இடத்தை பிடித்திருப்பது இன்னொரு பிளஸ். இதன் மூலமான நிஜ கதையின் குறியீடுகள் அரசியல் தெரிந்தவர்கள் புரிந்து பாராட்டும்படியே அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மகுடமாக நிஜ மாமன்னனாக மாறி வடிவேலுவின் கதாபாத்திரம் கடைசியில் அரியணை ஏறும் காட்சி பார்வையாளர்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
மைனஸ் என்று பார்த்தால் சரத்குமார்-பிரகாஷ் ராஜ் காலத்தை நினைவூட்டும் வில்லனின் குணாதிசயங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடங்கி ஹீரோ ஹீரோயினின் திணிக்கப்பட்ட காதல் காட்சிகள் வரை ஆங்காங்கே அலுப்புத்தட்ட வைக்க தான் செய்கிறது. இடைவேளைக்கு பிறகு கதை ஓட்டத்தில் விறுவிறுப்பு குறைய ஆரம்பிக்கிறது. அதன் பின் கிளைமாக்சில்தான் சூடு பிடிக்கிறது. சண்டை காட்சிகள் சினிமாத்தனமாக தொக்கி நிற்கின்றன. சில நீளமான காட்சிகள் ஒரு கட்டத்துக்குமேல் பொறுமையை சோதிக்கின்றன முதல்வராக வரும் லால் கதாபாத்திரம் செயற்கை. மாநில தலைவர் தலையிட்ட பின்பும் , ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு போலீஸ் பாதுகாப்பு இவ்வளவு பூஜ்ஜியமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை, தேனி ஈஸ்வரின் துல்லியமான ஒளிப்பதிவு, ஆர்.கே. செல்வாவின் படத்தொகுப்பு என அணைத்து தொழிற்நுட்ப பங்களிப்பும் சிறப்பு. ஏற்கனவே ஹிட் ஆன பாடல்கள் கதையொட்டதுடனே ஒலிக்கின்றன. ரெட் ஜெயன்ட் மூவீஸ் அவர்களுக்கே உரிய தரத்துடன் தயாரித்துள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் இயலாமையை 'பரியேறும் பெருமாள்' படத்தில் பதிவு செய்த மாரி செல்வராஜ், 'கர்ணன்' படத்தில் அவர்கள் பொங்கி எழுந்து பதிலடி கொடுக்க வைத்தார். 'மாமன்னன்' படத்தில் அவர்கள் தலைவர்களாக உருவெடுக்கும்பொழுது சந்திக்கும் சவால்களை பதிவிட்டுருக்கிறார். அதில் சிறப்பு வெளிச் சக்திகளைக் காட்டிலும் ஒடுக்கப்பட்டவர்களை அடிமைப்படுத்துவது அவர்கள் மனங்களே என்றும் இளைய சமுதாயம் பழமையை துறக்க தயாராக இருக்கிறார்கள் என்றும் பதிவு செய்ததன் மூலம் சபாஷ் சொல்ல வைக்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி மாரி செல்வராஜ் சமகால தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத படைப்பாளியாக உயர்ந்து வருகிறார் என்பதை மாமன்னன் கோடிட்டு காட்டுகிறது.
சிறந்த அரசியல் படமாக மட்டும் இல்லாமல் தந்தை மகன் உறவு பிணைப்பை ஆழமாக சொல்லும் மாமன்னனை தாராளமாக குடும்பத்துடன் தியேட்டரில் சென்று ரசிக்கலாம்.
Comments