திரைவிமர்சனம் 'மாலை நேரத்து மயக்கம் : மயங்க வைக்கும் காதல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட கீதாஞ்சலி இயக்கிய முதல் படம்தான் 'மாலை நேரத்து இயக்கம்'. முதல்படமே அதுவும் ஒரு பெண் இயக்குனரின் படம் சென்சாரில் ''ஏ'' சர்டிபிகேட் பெற்றதில் இருந்தே இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. உண்மையிலேயே அப்படி என்ன இருக்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.
சில காதல் கதைகளை விவரிப்பது கடினம். ஆனாலும் முயற்சி செய்துள்ளோம்' என்ற டைட்டிலுடன் படம் தொடங்குகிறது. உயிருக்கு உயிராக காதலித்த காதலன் வேறொரு பெண்ணை நேசிப்பதாக கழட்டிவிட்டு சென்றதால் காதல் தோல்வியால் ஏமாற்றம் அடைந்து காதல், திருமணம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் பெண் வாமிகா தான் படத்தின் ஹீரோயின்.
அப்பாவி ஹீரோ பாலகிருஷ்ணா. எந்த பெண்ணும் இவரை திரும்பி பார்க்கவில்லை. இந்நிலையில் தனக்கென்று ஒரு தேவதை பிறந்திருப்பாள் என்றும் திருமணத்திற்கு பின்னர்தான் முதல் செக்ஸ் என்றும் கொள்கையோடு இருந்து வருகிறார்.
காதல் தோல்வியால் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் துயரத்தில் இருக்கும் வாமிகா, அம்மாவின் கட்டாயத்திற்காக திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இந்நிலையில்தான் பாலகிருஷ்ணன் வாமிகாவை பெண் பார்க்க வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆகிறது. பல கனவுகளுடன் முதலிரவுக்காக காத்திருக்கும் பாலகிருஷ்ணாவுக்கு பெரிய ஏமாற்றம் காத்திருக்கின்றது. வாமிகாவை சமாதானப்படுத்த பாலகிருஷ்ணன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் இருவரும் ஒரு ஓட்டலுக்கு டின்னர் செல்கின்றனர். அங்கு வரும் வாமிகாவின் முன்னாள் பாய்பிரண்டுகளை கணவன் முன்னாலே மனோஜா கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார். இதனால் பாலகிருஷ்ணா எரிச்சலடைகிறார். ஒருநாள் நண்பனின் ஆலோசனைப்படி வாமிகாவுக்கு அவருக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி கொடுத்து தன்னுடன் சந்தோஷமாக இருக்குமாறு பாலகிருஷ்ணன் கட்டாயப்படுத்துகிறார். ஆனால் அந்த போதையிலும் தெளிவாக இருக்கும் வாமிகா உறவுக்கு உடன்பட மறுக்கிறார். இதனால் ஆத்திரமடையும் பாலகிருஷ்ணன் வாமிகாவை ரேப் செய்து விடுகிறார்.
இதனால் கணவன் மீது ஆத்திரமடையும் வாமிகா, விவாகரத்து முடிவை எடுக்கின்றார். இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்களா? மனைவி மீது உயிரையே வைத்திருக்கும் பாலகிருஷ்ணா விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டாரா? அல்லது மீண்டும் இணைந்து வாழ்ந்தார்களா? என்பதுதான் மீதிக்கதை
புதுமுகம் வாமிகாதான் படத்தின் உயிர். புதுமுகம் என்றே தெரியாத அளவுக்கு நடிப்பில் அத்தனை மெச்சூரிட்டி. காதலனையும் மறக்க முடியாமல், கணவனிடமும் நெருங்க முடியாமல் ஒருவித குழப்பத்திலேயே இருக்கும் கேரக்டரில் தெளிவாக நடித்துள்ளார். கணவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் வரும் நேரத்தில் நடக்கும் அந்த ரேப் அவருடைய மனதை முற்றிலும் மாற்றிவிடுவதை தனது தெளிவான நடிப்பால் உணர்த்தியுள்ளார். குறிப்பாக மழை பெய்யும் அந்த கிளைமாக்ஸில் நடக்கும் அந்த திடீர் திருப்பம் காட்சியில் வாமிகாவின் நடிப்பு ஒரு அனுபவமுள்ள நடிகையின் நடிப்புக்கு ஈடானது.
காதல் கொண்டேன் தனுஷ், '7ஜி ரெயின்போ காலனி' ரவிகிருஷ்ணன் கேரக்டர்களை மீண்டும் ஒருமுறை பார்த்தது போல் உள்ளது ஹீரோ பாலகிருஷ்ணாவின் கேரக்டர். தனுஷூக்காகவே இந்த கதை எழுதப்பட்டதுபோல் உள்ளது. இவருடைய ஒவ்வொரு காட்சியின் நடிப்பையும் பார்க்கும்போது தனுஷை பார்த்த மாதிரியே உள்ளது. செல்வராகவனின் முந்தைய படங்களை பார்க்காதவர்களுக்கு இவருடைய நடிப்பு புதுமையாக தெரியும்
இயக்குனர் கீதாஞ்சலியின் பல காட்சிகளில் செல்வராகவன் ஸ்டைல் தெரிகிறது. சொல்லப்போனால் ஒரு முழு செல்வராகவன் படத்தை பார்த்ததுபோல்தான் இருக்கின்றது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் உறவு, பிரிவு, காதல், கோபம், சச்சரவு ஆகியவற்றை அழுத்தமான காட்சிகளால் மிகக்குறைவான வசனங்களுடன் புரிய வைக்க முயற்சித்துள்ளார். எத்தனை பேர்களுக்கு இந்த காட்சிகள் புரியும் என்று தெரியவில்லை. கணவனை விட்டு வாமிகா பிரிவதற்கு அழுத்தமான காரணத்தை கூறிய இயக்குனர் கீதாஞ்சலி, மீண்டும் ஒன்று சேருவதற்கு படிப்படியாக சில காரணங்களை கூறியிருக்கலாம். கிளைமாக்ஸில் ஏற்படும் அந்த ஒரே சம்பவத்தால் ஹீரோயின் திருந்திவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும் ஒரு பெண் இயக்குனரின் படத்தில் சர்வசாதாரணமாக கணவனும் மனைவியும் ஒன்றாக உட்கார்ந்து சரக்கு அடிப்பது, அம்மாவே மகளிடம் செக்ஸ் குறித்து கேள்வி கேட்பது, மற்றும் ரேப் காட்சிகள் ஆகியவற்றை கண்டிப்பாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கணவரிடம் கோபித்து கொண்டு செல்லும் மனைவி அம்மா வீட்டுக்கு செல்லாமல் பாய்பிரண்டு வீட்டுக்கு சென்று படுத்து தூங்குவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளும் படத்தில் உண்டு.
படத்தில் வசனங்கள் மிகவும் குறைந்த அளவே வருவதால் பெரும்பாலான காட்சிகளை பின்னணி இசைதான் நிரப்புகிறது. அறிமுக இசையமைப்பாளர் அம்ரித் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார். பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை மிக அருமை
பெரும்பாலான காட்சிகள் இண்டோரில் எடுக்கப்பட்டுள்ளதால் ஒளிப்பதிவு குறித்து சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. அந்த மூணாறு பனிக்காட்சிகளில் மட்டும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் மின்னுகிறார்.
மற்றபடி காமெடி, சண்டைக்காட்சி, என கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் ஒரு அழகான காதல் கதையை கவிதை போல முதல் படத்திலேயே கொடுத்துள்ளார் இயக்குனர் கீதாஞ்சலி. ஆனாலும் ரசிகர்கள் இந்த படத்தை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் 'மாலை நேரத்து மயக்கம்' ஒரு மயங்க வைக்கும் காதல் கதை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout