கிருஷ்ணர், அர்ஜுனர் பேச்சு இப்போது தேவையா? ரஜினியை மறைமுகமாக விமர்சித்த பாடலாசிரியர்!
- IndiaGlitz, [Wednesday,August 14 2019]
சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மோடி, அமித்ஷாவை கிருஷ்ணர், அர்ஜுனர் என ரஜினிகாந்த் ஒப்பீடு செய்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் 'கன்னிராசி' பத்திரிகையாளர் சந்திப்பில் பாடலாசிரியர் யுகபாரதி கூறியதாவது:
தேசிய விருது அறிவிப்பால் ஆனந்தம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த போது அதிர்ச்சியே கிடைத்தது. தமிழ் படங்கள் முக்கியமாக பிரதிநிதித்துவப்படவில்லை. கிருஷ்ணர், அர்ஜுனர் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், திரையுலகிற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான நடிகர்கள், கலைஞர்கள் இது குறித்துப் பேசவேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.
பின்னர் மேலும் ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, 'கன்னிராசி' படத்தில் கண்ணன் பாடல் ஒன்றைப் பார்த்திருப்பீர்கள். அதில் கொலு வைக்கக் கூடிய சிலைகளுக்கு இடையே, பெரியார் படத்தை வைப்பது போன்ற ஒரு காட்சியை இயக்குநர் முத்துக்குமரன் வைத்திருக்கிறார். அந்தக் காட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினி பேசியதும், விஜய் சேதுபதி பேசியதிற்கான அர்த்தமாக அது இருந்தது என்று கூறினார்.
'கன்னிராசி' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கும் ரஜினி பேச்சுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றாலும், ரஜினி குறித்து யுகபாரதி பேசியதால் மட்டுமே அவர் இன்று பல ஊடகங்களின் செய்திகளில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.