முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்: 'மல்லீப்பூ' பாடல் குறித்து தாமரை

  • IndiaGlitz, [Friday,September 23 2022]

சமீபத்தில் வெளியான சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற ‘மல்லீப்பூ’ என்ற பாடல் செம ஹிட் என்பது தெரிந்ததே

இந்த பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடன இயக்குனர் பிருந்தா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த பாடல் முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது என்று இந்த பாடலை எழுதிய அனுபவம் குறித்து கவிஞர் தாமரை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

’வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெறும் 'மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே' பாடல் பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி. இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதி பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது. இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று !

பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு ! கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாக தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், இரகுமான் எனக்கு கொடுத்த சுதந்திரம் பெரிது !

படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா?? இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம். முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் ! விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்.