சின்னத்திரை நடிகை மற்றும் பாஜக பிரமுகர் மீது போலீஸில் புகார் அளித்த சினேகன்: என்ன காரணம்?

சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான நடிகை மீது நடிகரும் பாடல் ஆசிரியருமான சினேகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பாஜக பிரமுகர் மற்றும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது காவல்துறையில் மோசடி புகார் கொடுத்த பாடலாசிரியர் சினேகன் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சினேகன் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகர் மற்றும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

‘சினேகன் பவுண்டேஷன்’ என்ற பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி பணம் வசூலித்து வருவதாகவும், இது குறித்து தகவல் தனக்கு தெரிந்த உடன் அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் அந்த நோட்டீஸ் சரியான முகவரி இல்லை என்ற காரணத்தால் திரும்பி வந்துவிட்டதாக கூறினார்.



இதனையடுத்து அந்த விலாசம் போலியானது என்பதை தெரிந்து கொண்டதாகவும் இது குறித்து செல்போனில் தொடர்புகொண்ட போது நேரில் சமாதானம் செய்துகொள்ளலாம் என்று அழைத்ததாகவும் ஆனால் தான் சட்டப்படி புகார் அளிக்க வந்துள்ளதாகவும் சினேகன் கூறினார்.



முறைப்படி அங்கீகாரம் பெற்று சினேகம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் தனது பெயரை பயன்படுத்தி பணமோசடி செய்து வரும் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.