பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்
- IndiaGlitz, [Thursday,May 25 2017]
எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் நா.காமராசர் காலமானார். அவருக்கு வயது 75. சென்னையில் சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது. கோலிவுட் திரையுலகினர் மறைந்த பழம்பெரும் பாடலாசிரியருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த நா.காமராசர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் படித்தார். மாணவ பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். தமிழ் மேல் தீவிர பற்றுள்ள நா.காமராசன் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் சில ஆண்டுகள் பணியாற்றியவர்.
பின்னர் எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அவர் நூற்றுக்கணக்கான திரையிசை பாடல்களை எழுதினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் நன்மதிப்பை பெற்ற அவர் அவரது ஆட்சி காலத்தில் அதிமுகவில் ஒருசில பதவிகளிலும் இருந்துள்ளார்.
மறைந்த நா.காமராசன் அவர்களுக்கு லோகமணி என்ற மனைவியும், தைப்பாவை என்ற மகளும், திலீபன் என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான தேனியில் இன்று மாலை நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.