லைக்கா தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' பட முக்கிய அப்டேட்

  • IndiaGlitz, [Saturday,July 22 2023]

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனித்திருக்கிறார். ஹாரர் வித் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் பின்னணி பேசி, தன் பங்களிப்பினை நிறைவு செய்திருக்கிறார். இப்படத்திற்கான பின்னணி இசை கோர்க்கும் பணியை ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி, எதிர்வரும் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறார் என்றும், இப்படத்தின் இசை வெளியீடு மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக்கினை அடுத்த மாதம் வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே லைக்கா புரொடக்ஷன்ஸ்- ராகவா லாரன்ஸ் -வைகைப்புயல் வடிவேலு- பி வாசு கூட்டணியில் உருவாகி இருக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.