'பொன்னியின் செல்வன் 2' ரிலீசுக்கு முன் லைகாவின் மாஸ் திட்டம்.. 'கேஜிஎப்' பாணியா?

  • IndiaGlitz, [Thursday,April 06 2023]

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்க்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மாஸ் திட்டம் ஒன்றை லைகா நிறுவனம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்த இசை வெளியீட்டுக்கு பிறகு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பலருக்கு அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன் ’பொன்னின் செல்வன்’ முதல் பாகம் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ‘கேஜிஎப்’ இரண்டாம் பாகம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன் இதே போல்தான் முதல் பாகம் வெளியானது என்பதும் முதல் பாகத்தை பார்த்துவிட்டு உடனே இரண்டாம் பாகத்தை பார்த்தால் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. லைகாவின் இந்த திட்டம் மிகவும் புத்திசாலித்தனமானது என திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.