'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்
- IndiaGlitz, [Thursday,February 27 2020]
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பிரபலம் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் நிகழ்ந்த ‘இந்தியன் 2’ படத்தின் விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் லைகா, கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர், தயாரிப்பு மேலாளர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் மற்றும் லைகா நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் லைகா நிறுவன தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜ் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான கிரேன் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை இயக்குவது, பராமரிப்பது என்னுடைய வேலை இல்லை. விபத்துச் சம்பவத்தின்போது நான் 300 மீட்டர் தள்ளி உணவுப் பரிமாற்றத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் என்னை விசாரணைக்கு போலீஸார் அழைத்துள்ளார்கள். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.