சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் வியக்க வைத்த லைக்கா சுபாஷ்கரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோர் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை மகிமா நம்பியார் பேசுகையில், '' சந்தோஷமாக உணர்கிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான சுபாஷ்கரனுக்கும், மாஸ்டர் ராகவா லாரன்சுக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு அண்ணா உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். ராகவா லாரன்ஸை பற்றி புகழ்ந்து பேசுவது அவருக்கு பிடிக்காது. இருந்தாலும் சிலவற்றை சொல்ல வேண்டும். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘சர்வீஸ் இஸ் காட்’. சர்வீஸ் செய்பவர்கள் இறைவன் தானே..! நான் நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஹீரோ.. கடவுள்.. மாஸ்டர் ராகவா லாரன்ஸ் சார் தான். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். '' என்றார்.
நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், '' சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், வரவேற்பும்.. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இயக்குநர் பி. வாசு சார் என்னை பார்த்தவுடன், ஓகே நீ பிரியா கதாபாத்திரத்தில் நடி என்றார். அப்போதிலிருந்து ஆறு மாதம் வரை தொடர்ந்த இந்த சந்திரமுகியின் பயணம் என் வாழ்க்கையில் எப்போது மறக்க இயலாத வகையில் அமைந்தது. இந்த தருணத்தை நான் இப்போதும் கொண்டாடுவேன்.
வடிவேலு சாரை படப்பிடிப்பு தளத்தில் முதன்முதலாக பார்த்தபோது அவரிடம் சென்று நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை என்றேன். நான் சென்னைக்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டது அவருடைய படங்களை வீடியோவில் பார்த்து தான். கங்கணா ரனாவத் என்னுடைய ரோல் மாடல். நீங்கள் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருப்பதை அதிர்ஷ்டமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்.'' என்றார்.
இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி பேசுகையில், '' இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. சந்திரமுகி படத்தின் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம் சந்திரமுகியாக நடிப்பது யார்? என்று கேட்டபோது, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
‘வைகைப்புயல்’ வடிவேல் பேசுகையில்,'' ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை. சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.
இயக்குநர் பி. வாசு பேசுகையில், '' நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக் கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ...! என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்... இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்து கொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம். சுபாஷ்கரன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம். ஏனெனில் அனைத்து இயக்குநர்களையும், அவர்களின் கனவுகளையும் அவர் பிரம்மாண்டமாக சாத்தியப்படுத்துபவர். நல்ல மனதுடையவர். இவை எல்லாத்தையும் விட எனக்கு கிடைத்த சிறந்த வேட்டையன் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் அவரை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று.. குடும்பம், பாசம், சிரிப்பு, சந்தோஷம் என்றிருக்கும். வேட்டையன் என்றால் வேட்டையன் மட்டும் இருக்க மாட்டான். அவனுள் இன்னொருத்தனும் இருக்கிறான். அது யார்? என்பது நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.
நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், '' அருமையான மாலை வேளை. பிரம்மாண்டமாகவும் அழகாகவும் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, வண்ணமயமான அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் எந்த கதாபாத்திரத்தையும் நடிப்பதற்காக விரும்பி கேட்டதில்லை. இயக்குநரிடம் சந்திரமுகியாக நடிக்க நான் பொருத்தமாக இருப்பேனா? என கேட்டேன். சிறிது நேர யோசிப்பிற்குப் பிறகு அவர் சரி என்று ஒப்புக்கொண்டார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் பேசுகையில், '' ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார். '' என்றார்.
ராகவா லாரன்ஸ் பேசுகையில், '' மிகவும் சந்தோஷம். என்னுடைய மாணவர்களை அனைத்து மேடைகளிலும் நடனமாட வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஒரு சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. என்னிடம் உங்களுடைய மாணவர்கள் தொடர்ச்சியாக மேடை ஏறி நடனமாடும் வாய்ப்பை அளித்தாலும், ஒரே மாதிரியான நடனங்களைத் தானே ஆடுகிறார்கள் . இது பார்வையாளர்களுக்கு போரடிக்காதா? என கேட்பர். அவர்களிடத்தில் திரிஷா. நயன்தாரா.. நடனம் ஆடினாலும், அவர்களும் ஒரே நடனத்தை தானே ஆடுகிறார்கள். அதை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்கிறீர்களே.. அதனால் இதையும் திரும்பத் திரும்ப பார்க்கலாமே.! எனச் சொல்வேன்.
இதனிடையே ராகவா லாரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைக்கா சுபாஷ்கரன் தெரிவித்த போது அரங்கமே ஏழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments