கோகோ, சிசிவி, 2.0: லைகா நிறுவனம் பெற்ற ஹாட்ரிக் வெற்றி
- IndiaGlitz, [Thursday,November 29 2018]
கடந்த 2014ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் எண்ட்ரி ஆனது லைகா நிறுவனம். அந்த படம் வெளியாகும்போது லைகா நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் எதிர்ப்புகளை தகர்த்து வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து லைகா பல தமிழ் சினிமாக்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு லைகாவுக்கு சிறப்பான ஆண்டு என்றே கூறலாம். லைகா நிறுவனம் தயாரித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா', மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' மற்றும் இன்று வெளியாகியுள்ள '2.0' ஆகிய படங்களால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் தனுஷின் 'வடசென்னை' படத்தை விநியோகம் செய்து உலகம் முழுவதும் லைகா ரிலீஸ் செய்தது.
மேலும் தற்போது சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம், சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்', கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 'இந்தியன் 2' ஆகிய படங்களளயும் லைகா தயாரித்து வருகிறது. லைகாவின் வருகையால் '2.0' போல் இன்னும் பல பிரமாண்ட படங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.