கமல்ஹாசனை அடுத்து லைகா அளித்த நிதியுதவி குறித்த அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,February 20 2020]
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றிரவு சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட மூவர் பலியாகினர் மேலும் ஒன்பது பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன், பலியான மூவர் குடும்பத்தினர்களுக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழ்க்குமரன் அவர்கள் லைகா நிறுவனத்தின் சார்பில் பலியான மூவர் குடும்பத்தினர்களுக்கு ரூ.2 கோடி நிதியுதவி அளிப்பதாகவும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் முழு மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். முன்னதாக லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், பலியானவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, காயம் அடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.