தமிழகத்திலும் வெட்டிக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Saturday,May 30 2020]
கொரோனா வைரஸ் பரபரப்பை போலவே வெட்டுக்கிளிகள் குறித்த பரபரப்பான செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதலில் வட மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களை தாக்கி அப்பகுதி விவசாயிகளை பீதியடைய செய்து வந்த வெட்டுக்கிளிகள் தற்போது தமிழகத்திலும் நுழைந்துவிட்டன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டத்தில் சில வெட்டுக்கிளிகள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டதை அடுத்து விவசாயத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நேற்று முதல் வெட்டுக்கிளிகள் நடமாட்டம் இருப்பதாகவும் அங்கு இருந்த எருக்கன் செடிகள், வாழை, பப்பாளி போன்றவற்றை வெட்டுக்கிளிகள் துவம்சம் செய்ததாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயத் துறை அதிகாரி ஒருவர் கூறியபோது ’வட இந்தியாவில் காணப்படுவது போன்ற வெட்டுக்கிளிகள் இவை கிடையாது என்றும் இந்த வெட்டுக்கிளிகள் உள்ளூர் வகையை சேர்ந்தவை என்றும் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் வட இந்தியாவை நாசப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்திற்கு வரும் முன்னர் தமிழக அரசு சுதாரித்து இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.