தாங்குமா தமிழகம்? மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
- IndiaGlitz, [Tuesday,November 23 2021]
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஒரே மாதத்தில் வங்கக்கடலில் 3 ஆவது முறையாக காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதும் குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தைத் தவிர புதுச்சேரியிலும் கனமழை பாதிப்பு ஏற்பட்டது.
முதலில் மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று சென்னை அருகே காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும் சென்னைக்கு அதிகப் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். மேலும் இதனால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் இன்னும் வடியாமலே இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் அந்தமான் கடலில் ஏற்பட்ட தாழ்வுநிலை காரணமாக குமரி, நெல்லை போன்ற தென்மாவட்டங்களில் கனமழை நீடித்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமை சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது.
இந்நிலையில் தற்போது 3 ஆவது முறையாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 அணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசைநோக்கி, இலங்கை, தென் தமிழகம் ஒட்டி கரையை கடக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் தமழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தென் தமிழகத்திலுள்ள மாவட்டங்களில் வரும் 25, 26 ஆம் தேதி கனமழை பொழியும் எனவும் அதேபோல காரைக்காலில் கனமழை பொழியும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது புயலாக வலுப்பெறுமா? என்பது குறித்து அறியமுடியவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.