கொரோனா சிகிச்சைக்கு குறைந்த விலையில் மருந்து: கேம் சேஞ்சராக இருக்குமா என எதிர்பார்ப்பு!!!
- IndiaGlitz, [Wednesday,June 17 2020]
கொரோனா சிகிச்சைக்கு ஒரு புதிய கேம் சேஞ்சராக இருக்கும் என ஸ்டிராய்டு வகை மருந்து ஒன்றை பிரிட்டன் அதிபர் பரிந்துரை செய்திருக்கிறார். பிரிட்டனின் ஆக்ஸ்ப்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கொரோனா சிகிச்சையில் இந்த மருந்து நல்ல பலனைக் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்நாடு முழுவதும் அனைத்து மருத்துவ மனைகளிலும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூட்டுவலி, வீக்கம், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் டெக்சாமிதாஸோன் என்ற மருந்துதான் தற்போது கொரோனா சிகிச்சையில் நல்ல பலனைக் கொடுப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், டெக்சாமிதாஸோன் மருந்தை வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் சோதித்து பார்த்து இருக்கிறது. தீவிர கொரோனா நோய் பாதிப்பில் இருப்பவர்களுக்கு இந்த மருந்தை ஊசியாகச் செலுத்தும்போது உயிரிழப்பு 5:1 விழுக்காடு குறைவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த மருந்து மிகவும் விலை மலிவு என்பதால் உலக அளவில் மிகப் பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்திருக்கிறது. அந்நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன் தற்போது வரை 2 லட்சம் மருந்துகள் கையிருப்பில் வைக்கப் பட்டு இருக்கின்றன. மேலும் உலகின் அனைத்து ஏழை நாடுகளுக்கும் கிடைக்கும் வழிவகைச் செய்யப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
பல ஆண்டுகளாக ஆஸ்துமா போன்ற நோய் குறைபாடுகளில் பயன்படுத்தப் பட்டு வரும் டெக்சாமிதாஸோன் கொரோனா சிகிச்சைக்கு முழுமையான குணத்தைத் தருவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் மதிப்பில் 5 பவுண்டன் செலவாகும் இந்த மருந்து இந்திய மதிப்பில் 500 ரூபாய் எனவும் கூறப்படுகிறது. தமிழகச் சுகாதாரத் துறையும் இந்த மருந்தை சோதனை அளவில் இறக்குமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இதுவரை முறையான மருந்துகள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை. உலகச் சுகாதார நிறுவனம் சில மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாமா எனச் சோதித்து வருகிறது. மேலும், சில மருந்துகளை மட்டும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துமாறு வழிகாட்டுதலையும் WHO கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், Remdesivir, இண்டர்பிரான் போன்ற மருந்துகள் பரிசீலனையில் இருந்து வந்தன. இதில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான பக்க விளைவுகளை கொடுப்பதாக அறிவியல் ஆய்விதழ் Lancet கட்டுரை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அந்த மருந்தை பரிசீலனை பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது WHO.
தற்போது இண்டர்பிரான், Remdesivir மருந்துகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்தியா Remdesivir மருந்து தயாரிப்பிலும் ஈடுபட்டு இருக்கிறது. இத்தகைய நெருக்கடியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா அவிஃபாவிர் (Avifavir) என்ற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு அங்கீகரிக்கப் பட்ட மருந்தாக அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் பிரிட்டன் டெக்சாமிதாஸோன் என்ற மருந்து குறித்து நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட முக்கியமான கொரோனா தடுப்பூசிகள் ஆய்வில் இருக்கின்றன. அதில் Sanofi, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், மாடர்னா நிறுவனம், Pfizer, சீனாவின் Ad5-NCov போன்றவை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் மனிதர்களின் மீது சோதனை செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.