சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது: ரஜினியை சந்தித்த 'லவ் டுடே' இயக்குனரின் பதிவு

சூரியனுக்கு அருகே இருப்பது போல் இருந்தது என சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்த பின்னர் ’லவ்டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய ’லவ்டுடே’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வசூல் இதுவரை 30 கோடிக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெறும் 5 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சம்பாதித்து கொடுத்ததை அடுத்து பிரதீப் ரங்கநாதனுக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதீப் ரங்கநாதன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:

இனியும் நான் என்ன கேட்க வேண்டும்? சூரியனுக்கு அருகில் இருந்தது போல் இருந்தது, அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், சிரிப்பு, நடை மற்றும் அன்பு என்ன ஒரு ஆளுமை! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பார்த்து வாழ்த்து பெற்றேன். நீங்க சொன்ன அந்த வார்த்தைகளை மறக்க மாட்டேன் சார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.