'நான் நட்சத்திரம் இல்லை: 'லவ் டுடே ' வெற்றி குறித்து பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு

’கோமாளி’ பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ’லவ் டுடே’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இது நிஜமாகவே நடந்துகொண்டிருக்கின்றதா? நான் கேட்பது காண்பது கனவா? ஒவ்வொரு நாளும் ’லவ் டுடே’ படத்தின் காட்சிகள், நள்ளிரவு காட்சிகள், தியேட்டர் அதிகரிப்பு ஆகியவைகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். வேலை நாட்களிலும் கூட குடும்ப ஆடியன்ஸ்கள் இந்த படத்திற்கு வந்திருப்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூரு, கேரளா, மலேசியா போன்ற இடங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். என் மீது நீங்கள் காட்டும் அன்பு மிகப் பெரியது. உங்களை நான் மிகவும் நம்பினேன், அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. என்னை நீங்கள் கை தூக்கி விட்டுள்ளீர்கள். என்னை நம்பி இந்த படத்தை ஒப்படைத்த அகோரம் சார் அவர்களுக்கு எனது நன்றி.

நீங்கள் 'லவ் டுடே’ படத்தை பார்த்து சிரிப்பதையும், கொண்டாடுவதையும் கதவுகளின் ஓரத்திலிருந்து நான் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது சந்தோஷம் தான் எனது சந்தோஷம், தியேட்டர்களில் ஏற்படும் கைதட்டல் மற்றும் மகிழ்ச்சியான முகங்களை பார்த்து மகிழ்ச்சி.

இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி. என்னை நேசிப்பதையும் என் மீது அக்கறை கொள்வதையும், எனக்கு ஆதரவளிப்பதையும் நான் பார்த்து வருகிறேன். நீங்கள் என்னை நேசிப்பதை விட நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன் என்பதை இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பிரதீப் ரங்கநாதன் பதிவு செய்துள்ளார்.