விலங்குகளுக்கும் தடுப்பூசியா? புதிய பாதிப்பால் அமெரிக்க எடுத்த முக்கிய முடிவு!

  • IndiaGlitz, [Wednesday,October 20 2021]

அமெரிக்காவில் உள்ள உயிரியியல் பூங்காக்களில் தற்போது விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்திருக்கிறது. இந்தத் தடுப்பூசி விலங்குகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019 டிசம்பரில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பலத்த சேதத்தை உண்டாக்கி இருக்கிறது. முதலில் மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்காய் நகரில் முதன் முதலாக ஒரு நாய்க்குப் பரவத் தொடங்கியது. பின்னர் சிங்கம், புலி, மான், கொரில்லா எனப் பல விலங்குகளுக்கும் இந்த வைரஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தியது. மேலும் இந்த நோய்த்தொற்று மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பல சோதனைக் கட்டங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் zoetis எனும் நிறுவனம் விலங்குகளுக்கு பிரத்யேகமாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாகாணங்களிலும் உள்ள உயிரியியல் பூங்காக்கங்கள், சரணாலயங்கள், விலங்கு பாதுகாப்பு மையங்களுக்குக் கிட்டத்தட்ட 11,000 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தடுப்பூசிகள் முதற்கட்டமாக அழிந்துவரும் உயிரினங்களுக்குச் செலுத்தப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் லூசியானா மாகாணத்தில் உள்ள ஆடுபோன் உயிரியியல் பூங்காவில் மீன்வளம் சார்ந்த உயிரினங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. மேலும் அழியும் நிலையில் இருக்கும் அனைத்து விலங்குகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன.